மலேகான் குண்டுவெடிப்பில் தொடர்புடையதாக கைது செய்யப்பட்ட இளம் பெண் துறவி சாத்வி பிரக்யா சிங் உள்ளிட்ட 3 பேருக்கு ஆதரவாக வாதாட சிறந்த வழக்கறிஞர்களை நியமிப்பதாக கூறிய விவகாரத்தில் தாம் கைதாக காத்திருப்பதாக சிவசேனா தலைவர் பால்தாக்கரே தெரிவித்துள்ளார்.
PTI Photo
FILE
சிவசேனாவின் அதிகாரபூர்வ நாளேடான ‘சாமனா’வில் பால்தாக்கரே கடந்த சில நாட்களுக்கு முன் எழுதிய தலையங்கத்தில், மாலேகான் குண்டுவெடிப்பு தொடர்பாக பயங்கரவாதத் தடுப்புப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ள சாத்வி பிரக்யா, ஓய்வுபெற்ற மேஜர் ரமேஷ் உபத்யாய, சமீர் குல்கர்னி ஆகிய மூவரையும் ஒட்டுமொத்த இந்து சமுதாயமும் ஆதரிக்க வேண்டும்.
நமது நாட்டை பலவீனப்படுத்திடும் எந்த வகையான பயங்கரவாதத்தையும் நாங்கள் ஆதரிக்க மாட்டோம். மலேகான் சம்பவத்தில் பலியோனோர் குறித்து நாங்கள் வருந்துகிறோம். ஆனால், நாடாளுமன்றம் மீதான தாக்குதல் வழக்கின் முக்கியக் குற்றவாளியான அஃசல் குருவை இந்நாட்டின் போலி மதசார்பின்மைவாதிகள் ஆதரித்தால், நாங்கள் ஏன் சாத்வி பிரக்யா, ரமேஷ் உபத்யாய, சமீர் குல்கர்னி ஆகியோரை நினைத்து பெருமைப்படவும், அவர்களை நேசிக்கவும் கூடாது என்று கேள்வி எழுப்பியதுடன், அவர்களுக்கு ஆதரவாக வாதாட சிவசேனா சார்பில் வழக்கறிஞர்களை நியமிப்போம் என்றும் அவர் அதில் கூறியிருந்தார்.
இதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் விதமாக மகாராஷ்டிர முதல்வர் விலாஸ்ராவ் தேஷ்முக் அரசு 4 ஆண்டுகள் பூர்த்தி செய்ததைப் பாராட்டும் விதமாக நடந்த விழாவில் பேசிய காங்கிரஸ் எம்.பி. குருதாஸ் காமத், மலேகான் குண்டுவெடிப்பில் கைது செய்யப்பட்டவர்களுக்கு ஆதரவாகப் குரல் கொடுத்த பால்தாக்கரேவை கைது செய்ய வேண்டும் எனப் ஆவேசமாகப் பேசினார்.
இதற்கு பதிலடி கொடுக்கும்விதமாக சாம்னா நாளேட்டில் பால்தாக்கரே எழுதியுள்ள செய்தியில், காமத் என்னைக் கைது செய்ய வேண்டும் என வலியுறுத்திய போது மேடையில் அமர்ந்திருந்த முதல்வர் விலாஸ்ராவ் தேஷ்முக் வேதனையில் நெளிந்திருப்பார்.
இவ்விவகாரத்தில் கைதாவதற்காக தாம் அஞ்சப்போவதில்லை. ஆனால் தம்மை கைது செய்ததற்கு ஹிந்துத்துவத்திற்கு ஆதரவாகப் பேசியது காரணமா என்பதை மத்திய அரசு விளக்க வேண்டும்.
சாத்வி வழக்கில் என்னைக் கைது செய்வதன் மூலம் ஹிந்த்துவா அமைப்புகளை அடக்கிட முடியும் என்றும், முஸ்லிம் மக்களின் வாக்குகளை மத்திய அரசு பெற்றி முடியும் என்றும் தப்புக் கணக்கு போட வேண்டாம் என்று பால்தாக்கரே கூறியுள்ளார்.