அஸ்ஸாம் குண்டு வெடிப்பு: ஹூஜி உதவியுடன் உல்ஃபா-போடா நடத்தியுள்ளன!
திங்கள், 10 நவம்பர் 2008 (11:01 IST)
அஸ்ஸாம் மாநிலத்தில் குவஹாத்தி, கோக்ரஜார் உள்ளிட்ட நகரங்களில் நடந்த தொடர் குண்டு வெடிப்புகளை வங்கதேசத்தில் இருந்து இயங்கும் ஹர்கத் உல் ஜிஹாதி இஸ்லாமியா எனும் பயங்கரவாத அமைப்பின் உதவியுடன் உல்ஃபா-போடோ அமைப்புகள் இணைந்து நடத்தியதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளதென உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அஸ்ஸாமில் கடந்த மாதம் 30ஆம் தேதியன்று நடந்த தொடர் குண்டு வெடிப்புகளில் 80 பேர் உயிரிழந்தனர், 400க்கும் அதிகமானோர் காயமுற்றனர்.
இந்த குண்டு வெடிப்புக்களில் பயன்படுத்தப்பட்ட ஆர்.டி.எக்ஸ், அமோனியம் நைட்ரேட் உள்ளிட்ட வெடிபொருட்களின் கலவையே இந்த அளவிற்கு உயிர் சேதத்தை ஏற்படுத்துவதற்கான காரணம் என்று உள்துறை வட்டாரங்கள் தெரிவித்ததாக பி.டி.ஐ. செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
சக்தி வாய்ந்த இப்படிப்பட்ட குண்டுகளை தயாரிக்கும் தொழில் நுட்பத்தை ஹூஜி அமைப்பு, உல்ஃபா, போடா தீவிரவாத அமைப்புகளுக்கு அளித்துள்ளது என்றும், இது மிகவும் கவலையளிகக்கூடிய ஒரு தொடர்பு என்றும் உள்துறை அமைச்சக வட்டாரங்கள் கூறியதாக அச்செய்தி தெரிவிக்கிறது.
போடோ தீவிரவாத அமைப்பு அங்கம் வகிக்கும் போடோ தேச கூட்டமைப்பு, நமது நாட்டின் பாதுகாப்பு படைகளுடன் போர் நிறுத்தம் செய்துகொண்டு மத்திய அரசுடன் பேச்சுவார்தை நடத்திவருகிறது என்பது இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.