வாஜ்பாய் தலைமையிலான் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியின் போது ஒதுக்கீடு செய்யப்பட்ட சர்ச்சைக்குரிய பெட்ரோல் நிலைய உரிமங்கள் தொடர்பான வழக்கில், 93 பெட்ரோல் நிலையங்களின் உரிமத்தை ரத்து செய்ததை உறுதிப்படுத்தி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நீதிமன்றதால் நியமிக்கப்பட்ட முன்னாள் நீதிபதிகள் எஸ்.சி. அகர்வால், பி. பாஹ்ரி ஆகியோரைக் கொண்ட குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் இந்த உரிமங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
அதன்படி மத்தியப் பிரதேசத்தில் 13, பீகாரில் 11, ஆந்திரா 11, கர்நாடகம் 16, மகாராஷ்டிரா 22, உத்தரப்பிரதேசத்தில் 20 பெட்ரோல் நிலையங்கள் உரிம ரத்து செய்யப்பட்டவையாகும்.
மொத்தம் 414 பெட்ரோல் நிலையங்களின் உரிமங்கள் குறித்து விசாரணை நடத்திய அந்தக் குழு 100க்கும் மேற்பட்ட நிலையங்களின் உரிமத்தை முறைப்படி அளிக்கப்பட்டுள்ளதாகக் கூறி அங்கீகரித்தது. சுமார் 300 பெட்ரோல் நிலையங்களின் உரிமங்களை ரத்து செய்ய அக்குழு பரிந்துரை செய்தது.
அவரை முறைப்படியான வழிமுறைகளைப் பின்பற்றி வழங்கப்படவில்லை என்று நீதிபதிகள் கூறியிருந்தனர்.
இதுதொடர்பான வழக்கு நீதிபதிகள் சி.கே. தாக்கர், ஆர்.வி. ரவீந்திரன் ஆகியோரைக் கொண்ட அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. இதில் 125 பெட்ரோல் நிலையங்களின் உரிமங்களை அனுமதித்து நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர்.
பெட்ரோல் நிலைய உரிமங்களை அரசியல்ரீதியில் சாதகமாக வழங்கியதாகக் கூறி வாஜ்பாய் அரசுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் பிரச்சினை எழுப்பப்பட்டதைத் தொடர்ந்து, அப்போதைய அரசு கடந்த 2002ஆம் ஆண்டு ஆகஸ்ட் 5 ஆம் தேதியன்று பெட்ரோல் நிலைய உரிமங்களை ரத்து செய்து அறிவிக்கை வெளியிட்டது.
இதையடுத்து பல பெட்ரோல் உரிம ஒதுக்கீட்டாளர்கள் உச்ச நீதிமன்றத்தை அணுகினர். இதையடுத்தே குழு அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது.
கடந்த ஆண்டு (2007) ஜனவரி மாதம் உச்ச நீதிமன்றம் வெளியிட்ட உத்தரவில் 300 பெட்ரோல் நிலைய உரிம ரத்து செல்லும் என்று கூறப்பட்டிருந்தது.
அரசியல் ஆதாயத்திற்காக தங்களுக்கு வேண்டியவர்களுக்கு தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு, பெட்ரோல் நிலையம், எல்பிஜி, மண்ணெண்ணெய் நிலைய உரிமங்களை அளித்ததாக உச்ச நீதிமன்றம் கடந்த ஆண்டு தீர்ப்பில் கூறியிருந்தது.
நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட குழுவிற்கு உரிமத்தை ரத்து செய்ய அதிகாரம் இல்லை என்ற வாதத்தை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் நிராகரித்து விட்டனர்.
சட்டத்திற்கு புறம்பாக பெட்ரோல் உரிமம் வழங்கப்பட்டதாக அறிவிக்கப்பட்ட பிறகு, ஒதுக்கீடு பெற்றவர் முதலீடு செய்தது குறித்து எந்தவித முறையீடையும் செய்ய முடியாது என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
முன்னதாக கடந்த 2002ஆம் ஆண்டு டிசம்பரில் உரிமத்தை ரத்து செய்து அரசு பிறப்பித்த அறிவிக்கையை தள்ளுபடி செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.