வடஇந்தியர்கள் மீது தாக்குதல்: 5 ஐக்கிய ஜனதாதள உறுப்பினர்கள் ராஜினாமா!

வெள்ளி, 7 நவம்பர் 2008 (12:30 IST)
மகாராஷ்டிராவில் வடஇந்தியர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவதைக் கண்டித்தும், மகாராஷ்டிரா நவநிர்மான் சேனா தலைவர் ராஜ்தாக்கரேவை கைது செய்யக் கோரியும், ஐக்கிய ஜனதாதளம் கட்சியைச் சேர்ந்த 5 மக்களவை உறுப்பினர்கள் இன்று தங்கள் பதவியை ராஜினாமா செய்துள்ளனர்.

பீகார் மாநில ஆளும்கட்சியான ஐக்கிய ஜனதாதளத்தைச் சேர்ந்த பிரபுநாத் சிங், ஜார்ஜ் பெர்னாண்டஸ், கைலாஷ் பேத்தா, பீனா சிங், ராஜீவ் ரஞ்சன் ஆகிய 5 பேரும் மக்களவை பொதுச் செயலரிடம் இன்று தங்களது ராஜினாமா கடிதத்தை சமர்ப்பித்துள்ளதாக டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மகாராஷ்டிராவில் வடஇந்தியர்களுக்கு எதிராக நடந்த தாக்குதல் தொடர்பாக மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்காததை கண்டித்து, தமது கட்சியின் மக்களவை உறுப்பினர்கள் 5 பேரும் ராஜினாமா செய்வார்கள் என புதுடெல்லியில் நேற்று செய்தியாளர்களிடம் ஐக்கிய ஜனதா தளத்தின் நாடாளுமன்ற தலைவர் பிரபுநாத் சிங் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்