மகாராஷ்டிர மாநிலத்தில் வட இந்தியர்களுக்கு எதிராகவும், மராட்டியர் அல்லாதோருக்கு எதிராகவும் மகாராஷ்டிர நவ நிர்மாண் சேனா மேற்கொண்டு வரும் பிரசாரத்தைத் தொடர்ந்து, நாம் அனைவரும் இந்தியர்கள் என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.
பல்வேறு பகுதிகளிலும் இருந்து வருவோருக்கு இடையே கருத்து வேறுபாடுகள் இல்லை என்று நீதிபதிகள் கூறியுள்ளனர்.
வட இந்தியர்களுக்கும், இந்தியர்களுக்கும் இடையே வேறுபாடு என்ன இருக்கிறது? அனைவருமே இந்தியர்கள் என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பி.என். அகர்வால், ஜி.எஸ். சிங்வி ஆகியோரைக் கொண்ட பெஞ்ச் வியாழனன்று உத்தரவிட்டது.
மும்பையில் பீகாரைச் சேர்ந்த வாலியர் ராகுல்ராஜ் சுட்டுக்கொல்லப்பட்டது குறித்து நீதிவிசாரணை நடத்தக் கோரி தொடரப்பட்ட பொதுநலன் கோரும் மனுவை விசாரித்து நீதிபதிகள் இந்த கருத்தை வெளியிட்டனர்.
இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்க வேண்டும் என்று மாநிலத்திற்கு உத்தரவிடுவதற்கு மத்திய அரசுக்கு போதிய அதிகாரம் உள்ளதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.