ஒபாமாவிற்குப் பிரதமர் மன்மோகன் சிங் வாழ்த்து!
புதன், 5 நவம்பர் 2008 (16:36 IST)
அமெரிக்க அதிபர் தேர்தலில் பாரக் ஒபாமா பெற்றுள்ள வெற்றி மிகச் சிறப்பானது என்றும், இருதரப்பு நல்லுறவுகளை வலுப்படுத்தும் திறமை அவருக்கு அதிகம் உள்ளதால் அவருடன் இணைந்து பணியாற்றும் வாய்ப்பை எதிர்பார்த்திருப்பதாகவும் பிரதமர் மன்மோகன் சிங் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றிபெற்றுள்ள ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த, முதல் ஆஃப்ரிக்க- அமெரிக்கரான பாரக் ஒபாமாவிற்கு பிரதமர் மன்மோகன் சிங் அனுப்பியுள்ள வாழ்த்துச் செய்தியில், "வெள்ளை மாளிகையை நோக்கிய உங்களின் மிகச் சிறப்பான பயணம் உங்கள் நாட்டு மக்களை மட்டுமல்ல உலகம் முழுவதும் உள்ள அனைவரையும் ஈர்த்துள்ளது" என்று கூறியுள்ளார்.
"ஜனநாயகம், தனிப்பட்ட உரிமைகள், பன்முகத் தன்மை, சுதந்திரம் ஆகியவற்றிற்கான தங்களின் பரஸ்பர உறுதிமொழிகளால் இரு நாட்டு மக்களும் (இந்தியா, அமெரிக்கா) பிணைக்கப்பட்டுள்ளனர்" என்றும், இந்த விடயங்கள்தான் இரு நாடுகளுக்கும் இடையிலான நல்லுறவுகள், நட்பு ஆகியவற்றிற்கு அடிப்படையாக அமைந்துள்ளன என்றும் அவர் கூறியுள்ளார்.
மேலும், "நமது மக்களிடையில் நாம் வலிமையான பிணைப்பைக் கொண்டுள்ளோம். இந்தியா- அமெரிக்கா இடையில் ஏற்கெனவே உள்ள ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும் வகையில் உங்களுடன் இணைந்து செயலாற்றுவதை நான் எதிர்பார்த்துள்ளேன்" என்று மன்மோகன் சிங் கூறியுள்ளார்.