கலவரங்களை வலிமையான அரசியல் நடவடிக்கை மூலம் கட்டுப்படுத்த முடியும்: உச்ச நீதிமன்றம்!
புதன், 5 நவம்பர் 2008 (10:44 IST)
மராட்டியத்தில் வட இந்தியர்களுக்கு எதிராக நடந்துவரும் கலவரங்களை வலிமையான அரசியல் நடவடிக்கை மூலமாக மட்டுமே கட்டுப்படுத்த முடியுமே தவிர, நீதிமன்ற உத்தரவுகளால் அது சாத்தியமில்லை என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.
இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் அவசரமாக விசாரிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையுடன் தாக்கல் செய்யப்பட்டிருந்த பொது நல வழக்கில், பீகார், மராட்டியம் ஆகிய மாநிலங்களில் வசிக்கும் மக்களின் உயிரையும் சொத்துக்களையும் பாதுகாக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு அம்மாநில அரசுகளுக்கும் மத்திய அரசிற்கும் உத்தரவிட வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
மேலும், ராஜ் தாக்கரே தலைமையிலான மராட்டிய நவநிர்மாண் சேனா அமைப்பினர் வட இந்தியர்களுக்கு எதிராக நடத்திவரும் தாக்குதல்களைத் தடுக்கும் விடயத்தில் மராட்டிய அரசு மட்டுமன்றி உத்தரப் பிரதேசம், பீகார் அரசுகளும் தோல்வியடைந்துவிட்டன என்று இந்த வழக்கைத் தாக்கல் செய்துள்ள சுகரீவ் துபே கூறியுள்ளார்.
பீகாரில் ரயில்கள், பேருந்துகள் உள்ளிட்ட பொதுச் சொத்துக்களைச் சேதப்படுத்தும் மாணவர்களைத் தடுப்பதற்கு நிதிஷ் குமார் தலைமையிலான அம்மாநில அரசு தவறிவிட்டது. மும்பையில் ரயில்வே அமைச்சகத்தால் நடத்தப்படும் தேர்வை எழுதச்சென்ற பவன் குமார் என்ற சிறுவன் மராட்டிய நவநிர்மாண் சேனா அமைப்பினர் நடத்திய தாக்குதலில் உயிரிழந்துள்ளான்.
எனவே உச்ச நீதிமன்றம் தலையிட்டு வட இந்தியர்களுக்கு எதிரான தாக்குதல்களைத் தடுப்பதற்கு மத்திய அரசு மற்றும் சம்பந்தப்பட்ட மாநில அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும் என்று சுகரீவ் துபே கோரிக்கை விடுத்திருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் பி.என்.அகர்வால், ஜி.எஸ்.சிங்வி ஆகியோர் கொண்ட அமர்வின் முன்பு விசாரணைக்கு வந்தபோது, வட இந்தியர்களுக்கு எதிரான கலவரங்களைக் கடுமையான அரசியல் நடவடிக்கையின் மூலம் மட்டுமே தடுக்க முடியுமே தவிர நீதிமன்ற உத்தரவுகளால் அது சாத்தியமில்லை என்று கூறினர்.