நிதி நெருக்கடி: பிரதமர் தலைமையில் உயர்நிலைக் குழு!

புதன், 5 நவம்பர் 2008 (03:55 IST)
சர்வதேச அளவில் ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடியால் இந்திய பொருளாதாரத்தில் ஏற்பட்டு வரும் பாதிப்புகள் குறித்து தொழிற்சாலைகள் வெளியிடும் கருத்துகளை தீர்ப்பதற்கு பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் உயர்மட்டக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

PTI PhotoPTI
இந்தக் குழுவில் பிரதமர் தவிர நிதியமைச்சர் ப. சிதம்பரம், வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் கமல்நாத், திட்டக்குழு துணைத் தலைவர் மான்டேக் சிங் அலுவாலியா, ரிசர்வ் வங்கி ஆளுநர் டி. சுப்பாராவ் ஆகியோர் இடம்பெறுவார்கள் என்று மத்திய அரசு வெளியிட்ட அறிக்கை தெரிவிக்கிறது.

இந்தக் குழு அவ்வப்போது கூடி, தொழில் நிறுவனங்கள் அரசிடம் தெரிவிக்கும் கருத்துகளுக்கு தீர்வு காண்பதுடன், ஒருங்கிணைந்து செயலாற்றும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய தொழில் நிறுவனங்களின் தலைவர்களைச் சந்தித்துப் பேசிய மறுதினமே இந்தக் குழு அமைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

தொழிற்சாளைகள் எழுப்பும் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு நிதித்துறை செயலாளர் தலைமையிலான குழு கூடி முடிவு எடுப்பதற்கும் பிரதமர் ஒப்புதல் அளித்திருப்பதாக அந்த செய்திக்குறிப்பு கூறுகிறது.

இந்தக் குழுவில் நிதித்துறை செயலாளர், தொழில்துறை செயலாளர், திட்டக்குழுவின் செயலாளர் ஆகியோர் இடம்பெற்றிருப்பார்கள்.