ஆந்திர மாநிலத்தில் மீண்டும் ஆட்சியைப் பிடிப்பதில் தெலுங்கு தேசம் கட்சி இப்போதே தீவிரம் காட்டத் தொடங்கி விட்டது.
பிரஜா ராஜ்யம் என்ற புதிய கட்சியை சிரஞ்சீவி தொடங்கியிருப்பதால், சிரஞ்சீவிக்கு இணையான சினிமா நட்சத்திரமான பாலகிருஷ்ணா மற்றும் என்.டி. ராமராவின் பேரன்களை களத்தில் இறக்குகிறார் தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு.
இதற்காக `யுவ கர்ஜனை' (இளைஞர் கர்ஜனை) என்ற பெயரில் தெலுங்கு தேசம் கட்சியின் தேர்தல் பிரசார துவக்கம் குண்டூரில் இன்று மாலை நடைபெறுகிறது.
இதனை என்.டி. ஆரின் மகனும், நடிகருமான பாலகிருஷ்ணா முறைப்படி தெலுங்கு தேசத்தை ஆதரித்து பேசவுள்ளார். இந்தக் கூட்டத்தில் இளம் தெலுங்கு ஹீரோக்களான கல்யாண் ராம், தாரக ரத்னா ஆகியோரும் கலந்து கொண்டு தங்களது அரசியல் பிரவேசத்திற்கு வித்திடுகிறார்கள்.
சிரஞ்சீவியை எதிர்த்து கடுமையான போட்டியை கொடுக்க சந்திரபாபு நாயுடு உருவாக்கியுள்ள திட்டமே இது என்று அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள்.
என்.டி. ஆரின் மற்றொரு பேரனான ஜூனியர் என்டிஆர், இந்தக் கூட்டத்தில் பங்கேற்பதாக இருந்தது. ஆனால் ஏற்கனவே ஒப்புக்கொண்ட படப்பிடிப்பில் அவர் கலந்து கொள்ளவிருப்பதால், யுவ கர்ஜனையில், அவர் பங்கேற்கவில்லை.
தெலுங்கு தேசம் கட்சியின் பிரசார களமாக இது கருதப்பட்டாலும், பாலகிருஷ்ணா தீவிர அரசியலில் இறங்குவதற்காகவே இந்தக் கூட்டம் நடைபெறுகிறது.