பள்ளிகளில் நன்கொடை,நேர்காணலுக்குத் தடை- கல்வி உரிமைச் சட்டம்!
செவ்வாய், 4 நவம்பர் 2008 (17:10 IST)
பள்ளிகளில் மாணவர் சேர்க்கையின்போது நன்கொடை வசூலிக்கக் கூடாது, நேர்காணல், மறைமுகத் தேர்வுகளின் மூலம் மாணவர்களை வடிகட்டித் தேர்வு செய்யக்கூடாது ஆகியன உள்ளிட்ட கடுமையான விதிகளுடன் கல்வி அடிப்படை உரிமைச் சட்ட வரைவை அரசு உருவாக்கி வருகிறது.
நடப்பு நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் தாக்கல் செய்யப்படவுள்ள இலவசக் கட்டாயக் கல்வி குழந்தைகளின் உரிமை, 2008 சட்ட வரைவினால் பள்ளிகளுக்கு உண்டாகும் நிதிச்சுமை மத்திய, மாநில அரசுகளால் பகிர்ந்துகொள்ளப்படும்.
ஆறு முதல் பதினான்கு வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு இலவசமாக கட்டாயக் கல்வி அளிக்கப்படுவதை உறுதி செய்வதில் உள்ளூர் அமைப்புகள், தனியார் பள்ளிகள் மற்றும் பெற்றோருக்கு உள்ள கடமைகளும் பொறுப்புகளும் கண்டிப்பாக பின்பற்றப்படுவதை இந்தச் சட்டம் வலியுறுத்துகிறது.
"இந்தச் சட்ட வரைவு நடப்பு நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் தாக்கல் செய்யப்படும். அதற்கான நிதிச் சுமை மத்திய, மாநில அரசுகளால் ஏற்றுக்கொள்ளப்படும்." என்று தொடக்கக் கல்விச் செயலர் ஏ.கே.ரத் தெரிவித்துள்ளதாக பி.டி.ஐ. செய்தி கூறுகிறது.
இந்தச் சட்டப்படி எந்தப் பள்ளியும் மாணவர்களிடம் நன்கொடை வசூலிக்கக்கூடாது. அவ்வாறு வசூலித்தால் குறிப்பிட்ட பள்ளிக்கு அது வசூலித்த நன்கொடையைப் போல 10 மடங்கு அபராதம் விதிக்கப்படும்.
அதேபோல மாணவர் சேர்க்கையின்போது மாணவர்களை நேர்காணல், மறைமுகத் தேர்வுகளின் மூலம் வடிகட்டுதலும் தடை செய்யப்படுகிறது. அப்படிச் செய்தால் முதன்முறை ரூ.25,000மும் அதையடுத்து ஒவ்வொரு முறையும் ரூ.50,000 மும் அபராதம் விதிக்கப்படும்.
அங்கீகாரம் பெறாத பள்ளிகள் ஒவ்வொன்றிற்கும் ரூ.1 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும்.
மேலும், தனியார் பள்ளிகளில் அவற்றிற்கு அருகில் உள்ள ஏழை மாணவர்களுக்கு 25 விழுக்காடு இடங்கள் ஒதுக்கப்பட வேண்டும். இந்த இடங்களுக்கான செலவை அரசு ஏற்றுக்கொள்ளும்.