நிலவை நெருங்கியது சந்திரயான்-1

செவ்வாய், 4 நவம்பர் 2008 (13:45 IST)
நிலவை ஆய்வு செய்ய இந்தியா அனுப்பிய சந்திராயன்-1 விண்கலம், தற்பொழுது நிலவில் இருந்து சற்றேறக்குறைய 4,000 கி.மீ. தூரத்திற்குட்பட்ட சுழற்சிப் பாதைக்கு வெற்றிகரமாக செலுத்தப்பட்டுள்ளது.

இன்று காலை சந்திரயானில் உள்ள நியூட்டன் திரவ எரிபொருள் உந்து இயந்திரம் இரண்டரை நிமிடங்கள் இயக்கப்பட்டு அதன் சுழற்சிப் பாதை அதிகரிக்கப்பட்டது. தற்பொழுது புவியில் இருந்து 3,80,000 கி.மீ. தூரத்தைக் கொண்ட நீள் (அபோஜி) சுழற்சிப் பாதையில் சந்திரயான்-1 சுற்றி வந்துக்கொண்டிருக்கிறது. நிலவு பூமியில் இருந்து 3,84,000 கி.மீ. தூரத்தில் உள்ளது.

எனவே, நிலவை மையமாகக் கொண்ட சுழற்சிப்பாதைக்கு சந்திரயானை செலுத்தும் மிக முக்கியமான இயக்கம் வரும் சனிக்கிழமை மேற்கொள்ளப்படும் என்று இந்திய வானிலை ஆய்வு அமைப்பின் (இஸ்ரோ) பேச்சாளர் சத்தீஸ் கூறியுள்ளார்.

நிலவின் ஈர்ப்புச் சக்தி வளையத்திற்குள் சந்திரயானை செலுத்தும் அந்தப் பணி மிக மிக முக்கியமானது ஆகும். அது நடைபெற்றப் பின்னரே சந்திரயான்-1 நிலவைச் சுற்றிவரத் தொடங்கும்.

வெப்துனியாவைப் படிக்கவும்