வங்கி முதலீடுகளுக்கு பாதிப்பில்லை - பிரதமர்!

செவ்வாய், 4 நவம்பர் 2008 (00:21 IST)
சர்வதேச அளவில் ஏற்பட்டு வரும் பொருளாதார நெருக்கடிகளால், இந்தியப் பொருளாதாரம் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், அதனால் ஏற்பட்டிருக்கும் நிலைமை மிகவும் மோசமாக இருப்பதாகவும் பிரதமர் மன்மோகன் சிங் கூறியிருக்கிறார்.

என்றாலும், வங்கிகளில் உள்ள முதலீட்டிற்கு பாதுகாப்பு உத்தரவாதம் உண்டு என்றும் அவர் கூறினார்.

புதுடெல்லியில் திங்களன்று தொழில் நிறுவனங்களின் தலைவர்களைச் சந்தித்த பின் செய்தியாளர்களுக்கு பிரதமர் பேட்டியளித்தார்.

சர்வதேச அளவில் நீடித்து வரும் பொருளாதார நெருக்கடி உள்ளிட்ட நிலைமையை அரசு தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும், நெருக்கடியை எதிர்கொள்ள அவ்வப்போது நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் மன்மோகன் சிங் கூறினார்.

வங்கிகளில் செய்யப்பட்டுள்ள சேமிப்பு முதலீடு குறித்து மக்கள் அஞ்சத் தேவையில்லை என்றும் பிரதமர் உறுதியளித்தார். வங்கிகளின் பின்னணியில், அரசு உள்ளதால் மக்கள் அச்சப்படத் தேவையில்லை என்றார்.

முதலீட்டாளர்கள் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்துவதே மத்திய அரசின் முன்னுரிமை என்றும் அவர் கூறினார்.

மற்ற நாடுகளுடன் தொடர்ந்து பேச்சு நடத்தி வருவதுடன், ஒருங்கிணைந்த பொருளாதார கொள்கையை வகுப்பது குறித்தும் ஆய்வு செய்து வருவதாக அவர் தெரிவித்தார்.

கடன்களுக்கான வட்டி விகிதங்களை ஓரளவுக் குறைத்து, கூடுதல் பணப்புழக்கத்தை ஏற்படுத்தவும் தமது அரசு முயற்சி செய்யும் என்றார்.

தற்போதைய நெருக்கடியான கால கட்டத்திலும், நாட்டின் வளர்ச்சி விகிதத்தை பாதுகாக்க தேவையான நிதிப் பரிவர்த்தனை நடவடிக்கைகளை எடுக்க உறுதி பூண்டுள்ளதாகவும் மன்மோகன் சிங் கூறினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்