உலகப் பொருளாதாரம்: பிரதமர் எச்சரிக்கை!
திங்கள், 3 நவம்பர் 2008 (15:39 IST)
உலகப் பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள சரிவினால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று வர்த்தம்- தொழில் துறையினருக்குப் பிரதமர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
உலகப் பொருளாதாரச் சரிவினால் நமது தொழில்துறையில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் தொடர்பான ஆய்வுக் கூட்டம் தலைநகர் டெல்லியில் இன்று நடந்தது.
இந்தக் கூட்டத்தில், பொருளாதாரச் சரிவின் பாதிப்புகளில் இருந்து மீள்வதற்காக மத்திய அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்துப் பிரதமர் மன்மோகன் சிங் கூறியதாவது:
உலகப் பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள கடும் நெருக்கடி இந்திய வங்கிகள், தொழில்துறையினர், முதலீட்டாளர்கள் ஆகியோரைக் கடுமையாகப் பாதித்துள்ளது. வங்கி நடைமுறைகளும், அங்குள்ள முதலீடுகளும் பாதுகாப்பாக உள்ளன.
உலகளவில் ஏற்பட்டுள்ள கடுமையான நிதி நெருக்கடி நமது வர்த்தக நிறுவனங்களையும், வங்கிகளையும் கடுமையாகப் பாதித்துள்ளது. உலகளவில் நீடித்துவரும் நிலையற்ற தன்மை நமது முதலீட்டாளர்களுக்குக் கவலையளித்து வருகிறது.
இந்நிலையில் நாம் கட்டுப்பாட்டுடன் நடந்துகொள்ள வேண்டும். தொழில்துறையினர் தங்களுக்குள்ள சமூகப் பொறுப்புக்களைக் கவனத்தில் கொண்டு, கடுமையாக நீடித்து வரும் உலகப் பொருளாதாரச் சரிவினால் ஏற்படும் பாதிப்புகளில் இருந்து தற்காத்துக்கொள்ளும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
இந்திய நிதி நிலையின் மீது மக்களுக்கு நம்பிக்கை குறையாமல் பாதுகாப்பதுதான் நமது முதல் நடவடிக்கையாகும். தற்போது நிலைமை அசாதாரணமாக இருப்பதால் நாம் மிகுந்த எச்சரிக்கையுடன் நடந்துகொள்ள வேண்டியது அவசியம்.
பொருளாதார நிலவரம் நாளுக்கு நாள் கண்காணிக்கப்பட்டு வருகிறது. தேவைப்பட்டால் மேலும் பல நடவடிக்கைகள் எடுக்கப்படும். தற்போதுள்ள பொருளாதார வளர்ச்சி விகிதம் தொடர்ந்து பாதுகாக்கப்பட வேண்டும். வளர்ச்சி விகிதத்தை மேலும் உயர்த்துவதற்குத் தொழில்துறையினர் இன்னும் முயற்சிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பிரதமர் பேசினார்.
இந்தக் கூட்டத்தில் ரத்தன் டாடா, முகேஷ் அம்பானி, கி. கே. காமத், சஷி ருயா, தீபக் பரேக், கே. பி. சிங் ஆகிய தொழிலதிபர்களும், அரசின் சார்பில் நிதி அமைச்சர் ப.சிதம்பரம், ரிசர்வ் வங்கி ஆளுநர் டி. சுப்பாராவ், திட்டக் குழு துணைத் தலைவர் மான்டெக் சிங் அலுவாலியா ஆகியோரும் பங்கேற்றனர்.