குண்டுவெடிப்பு: அஸ்ஸாம் செல்கிறார் பிரதமர்!

சனி, 1 நவம்பர் 2008 (12:28 IST)
அஸ்ஸாம் மாநிலத்தில் நேற்று முன்தினம் தொடர் குண்டுவெடிப்பு நிகழ்ந்த இடங்களில் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங், நேரில் சென்று நிலைமையை ஆய்வு செய்யவிருக்கிறார்.

கவுகாத்தி உட்பட மொத்தம் 13 இடங்களில் நேரிட்ட குண்டுவெடிப்புகளில் இதுவரை 77 பேர் உயிரிழந்துள்ளனர். 400-க்கும் அதிகமானோர் காயம் அடைந்துள்ளனர்.

குண்டுவெடிப்பைத் தொடர்ந்து அங்கு ஏற்பட்டிருக்கும் நிலைமை குறித்து ஆளுநர், முதல்வர் மற்றும் அதிகாரிகளுடன் பிரதமர் ஆய்வு செய்வதுடன், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை சந்தித்து ஆறுதல் கூறுவார் என்று அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

அஸ்ஸாம் மாநிலத்தில் இருந்தே மாநிலங்களவைக்கு தேர்வு செய்யப்பட்டவர் பிரதமர் மன்மோகன் சிங் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரதமருடன் காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தியும் அஸ்ஸாம் சென்று குண்டு வெடித்த பகுதிகளைப் பார்வையிடுவார் என்று தெரிகிறது. என்றாலும் சோனியாவின் பயணம் குறித்து காங்கிரஸ் தரப்பிலிருந்து உறுதிப்படுத்தப்படவில்லை.

ஏற்கனவே நேற்று குண்டுவெடிப்புப் பகுதிகளைப் பார்வையிட்ட உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல், அம்மாநில முதல்வர் தருண் கோகோய் மற்றும் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

முன்னதாக குண்டுவெடிப்பில் காயம் அடைந்து, கவுகாத்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களையும் சந்தித்து பாட்டீல் ஆறுதல் கூறினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சிவராஜ் பாட்டீல், குண்டுவெடிப்பில் தொடர்புடையவர்களைக் கண்டுபிடித்து கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு தாம் முதல்வரிடம் அறிவுறுத்தியிருப்பதாகக் கூறினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்