மாலேகான் குண்டுவெடிப்பு: இருவருக்கு நீதிமன்றக் காவல்!

புதன், 29 அக்டோபர் 2008 (17:39 IST)
மராட்டிய மாநிலம் மாலேகானில் உள்ள மசூதிக்கு அருகில் கடந்த மாதம் 29ஆம் தேதி நடந்த குண்டு வெடிப்புத் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் இந்திய இராணுவ வீரர் உட்பட இருவரை நவம்பர் 10 தேதிவரை நீதிமன்றக் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மாலேகான் மசூதி அருகே அன்று நடந்து குண்டு வெடிப்பில் 6 பேர் கொல்லப்பட்டனர், 101 பேர் காயமுற்றனர். இதில் பயன்படுத்தப்பட்ட குண்டுகளை ஏற்பாடு செய்து அளித்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டுள்ள சமீர் குல்கர்னி, ரமேஷ் உபாத்யாய் ஆகிய இருவரும் இன்று நாசிக் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டனர்.

அபினவ் பாரத் என்ற அமைப்பைச் சேர்ந்த இவர்களில் ரமேஷ் உபாத்யாய் இந்திய இராணுவத்தில் மேஜர் பொறுப்பில் இருந்து ஓய்வு பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

சந்தேகத்தின் அடிப்படையிலேயே தான் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்த மேஜர் ரமேஷ், நாட்டிற்கு சேவை புரிந்த தான் எந்த விதத்திலும் அதற்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டது கிடையாது என்றும, தன்னிடம் இருந்து உண்மையை வரவழைக்க நார்கோ சோதனை நடத்திலும் அதற்கு தனது உடல் நிலை அனுமதிக்குமானால் முழு விருப்பத்துடன் சம்மதிப்பதாகத் தெரிவித்துள்ளார்.

ஆனால், இவ்வழக்கில் குற்றம்சாற்றப்பட்டுள்ள பிரக்யா சிங் தாக்கூருடன் ரமேஷ் நெருங்கியத் தொடர்பில் இருந்தார் என்றும், முழுமையான விசாரணைக்குப் பின்னரே அவரை கைது செய்துள்ளதாகவும் அரசு வழக்கறிஞர் மிஸ்ரா கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்