மும்பையில் அராஜகம்! உ.பி.தொழிலாளர் அடித்துக் கொலை!
மும்பை: மஹாராஷ்டிராவில் வட இந்தியர்களுக்கு எதிரான வன்முறை தொடர்கிறது. உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த 25 வயது தொழிலாளர் ஒருவரை அடையாளம் தெரியாத சில நபர்கள் அடித்துக் கொன்றனர்.
செவ்வாய் மதியம், தரம்தேவ் ராய் என்ற அந்த தொழிலாளர், உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த 3 பேருடன் மும்பை உள்ளூர் ரயிலில் பயணம் செய்து கொண்டிருந்தார். அப்போது அடையாளம் தெரியாத சில நபர்கள் கும்பலாக அவரை அடித்து உதைத்தனர்.
படுகாயமடைந்த இவரை பத்லாபூரில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
கொலை செய்தவர்கள் மராத்தி மொழி பேசியதாக இறந்தவருடன் இருந்த அவரது நண்பர்கள் கூறியுள்ளனர்.
இது குறித்து அரசு ரயில்வே காவல்துறை ஆணையர் கூறுகையில், கொலையாளிகளுக்கு வலை விரிக்கப்பட்டுள்ளது என்றார்.
குர்லாவில் பேருந்து ஒன்றை கடத்த முற்பட்டதாக பீகார் இளைஞர் ஒருவரை மும்பை காவல்துறை சுட்டுக் கொன்றதையடுத்து இந்த கொலை சம்பவம் அங்கு மேலும் பரபரப்பை அதிகப்படுத்தியுள்ளது.
ராஜ் தாக்கரேயின் மகாராஷ்டிர புனர் நிர்மாண் சேனாவை சேர்ந்தவர்கள், ரயில்வே வேலைக்காக தேர்வு எழுத வந்த வட இந்திய மாணவர்களை தாக்கத் தொடங்கியதிலிருந்து இது போன்ற வன்முறைகள் அங்கு தலை விரித்தாடத் துவங்கியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.