ஜம்மு-காஷ்மீர் தேர்தலில் பிடிபி போட்டி!

செவ்வாய், 28 அக்டோபர் 2008 (16:56 IST)
ஜம்மு-காஷ்மீர் மாநில சட்டப்பேரவைத் தேர்தலை தங்கள் கட்சி புறக்கணிக்கப் போவதில்லை என்றும், தேர்தலில் போட்டியிட முடிவு செய்திருப்பதாகவும் மக்கள் ஜனநாயகக் கட்சியின் (பிடிபி தலைவர் மெஹ்பூபா முஃப்தி தெரிவித்துள்ளார்.

ஸ்ரீநகரில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், தேர்தலுக்கு முன்பாக காஷ்மீர் எல்லைப் பகுதியில் அனைத்துப் பிரிவினருடனும் உரிய பேச்சுவார்த்தை நடத்துவதற்கான முயற்சிகளை அரசு மேற்கொள்ள வேண்டும் என்று கூறினார்.

தமது கட்சி சட்டப்பேரவைத் தேர்தலை புறக்கணித்தால், சில அரசியல் கட்சிகள் தங்களது பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுப்பதற்கு அது வழி வகுத்து விடும் என்பதால், தேர்தலைப் புறக்கணிக்கப் போவதில்லை என்று மெஹ்பூபா குறிப்பிட்டார்.

எனவே இந்தத் தேர்தல் மக்கள் ஜனநாயக் கட்சிக்கு ஏற்பட்டிருக்கும் சவால் என்று கூறிய அவர், அதனை தாங்கள் எதிர்கொள்ளப் போகிறோம் என்றார்.

ஜம்மு-காஷ்மீரில் சுய ஆட்சி கோரி கடந்த 25ம் தேதி வெளியிடப்பட்ட ஆவணத்தில் இடம்பெற்றிருந்த பெரும்பாலான கருத்துகளுடன் கூடிய தேர்தல் அறிக்கையையும் மெஹ்பூபா வெளியிட்டார்.

நவம்பர் 17ஆம் தேதி தொடங்கி 7 கட்டமாக ஜம்மு-காஷ்மீரில் சட்டப்பேரவைக்குத் தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்ட 10 நாட்களுக்குப் பின் பிடிபி தேர்தலில் போட்டியிடும் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்