அனைத்துப் பிரிவினருக்கும் பாதுகாப்பு- பிரதமர் உறுதி!

செவ்வாய், 28 அக்டோபர் 2008 (12:56 IST)
மகாராஷ்டிர மாநிலத்தில் வசிக்கும் அனைத்து மக்களுக்கும் பாதுகாப்பு உறுதியளிக்கப்படும் என்று பிரதமர் மன்மோகன் சிங் கூறியிருக்கிறார்.

மும்பையில் அண்மையில் வட இந்தியர்கள் மீதான தாக்குதல்களைத் தொடர்ந்து, அம்மாநில முதல்வர் விலாஸ்ராவ் தேஷ்முக்குடன் பிரதமர் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பேசியதாக பிரதமர் அலுவலக செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

முன்னதாக பீகார் மாநிலத்தைச் சேர்ந்த அனைத்துக் கட்சிகளைச் சேர்ந்த பிரதிநிதிக் குழுவினர் புதுடெல்லியில் நேற்று பிரதமரைச் சந்தித்து இப்பிரச்சினை குறித்து கோரிக்கை வைத்தனர்.

அவர்களிடம், மகாராஷ்டிராவில் அனைத்து சமுதாயத்தினரின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் சட்டம்-ஒழுங்கு நடவடிக்கை எடுப்பதற்குத் தேவையான முயற்சிகளை அரசு எடுக்கும் என்று பிரதமர் உறுதியளித்ததாக செய்தித்தொடர்பாளர் கூறினார்.

மகாராஷ்டிர மாநிலத்தில் சமீபத்திய நிகழ்வுகள் கவலையளிப்பதாக பீகார் குழுவினர் பிரதமரிடம் தெரிவித்தனர். மும்பையில் நேற்று இளைஞர் காவல்துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டதையும் அக்குழுவினர் சுட்டிக்காட்டினர்.

வட இந்தியார்களுக்கு எதிரான தாக்குதலை தடுத்து நிறுத்துவதில் மத்திய அரசு தலையிட வேண்டும் என்றும் கோரி பிரதமரிடம் மனு ஒன்றை அவர்கள் அளித்தனர்.

இதையடுத்து விலாஸ்ராவ் தேஷ்முக்கிடம் பேசிய பிரதமர், அனைத்து பிரிவினருக்கும் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு கேட்டுக் கொண்டார்.

கடந்த 19ம் தேதியன்று ராஜ்தாக்கரே தலைமையிலான மகாராஷ்டிர நவநிர்மாண் அமைப்பினர் நடத்திய தாக்குதலில் பீகாரைச் சேர்ந்த மாணவர் ஒருவர் உயிரிழந்தார். இதையடுத்து ராஜ்தாக்கரேவைக் கைது செய்ததைத் தொடர்ந்து, ஏற்பட்ட வன்முறையில் 4 பேர் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்