விக்கிரவாண்டியில் தனியார் பள்ளியில் கழிவுநீர் தொட்டியில் நான்கு வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக பள்ளி தாளாளர், முதல்வர் மற்றும் ஆசிரியர் ஆகிய மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
விக்கிரவாண்டியை சேர்ந்த பழனிவேல், சிவசங்கரி தம்பதியின் ஒரே மகளான லியா லட்சுமி, தனியார் பள்ளியில் எல்கேஜி படித்து வந்தார். நேற்று பகல் 12 மணிக்கு வகுப்பின் இடையே மாணவர்கள் வெளியில் விளையாடி மீண்டும் வகுப்பறைக்கு வந்த போது, லியா லட்சுமி மட்டும் காணவில்லை.
இதனால் ஆசிரியர்கள் தேடி பார்த்த போது, கழிவுநீர் தொட்டியின் மேல் தகரம் உடைந்திருந்தது. அதன் வழியாக பார்த்தபோது, குழந்தை உள்ளே விழுந்து கிடந்தது தெரியவந்தது. உடனடியாக குழந்தையை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
ஆனால், மருத்துவர்கள் குழந்தை ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து, குழந்தையின் தந்தையின் புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, பள்ளியின் தாளாளர், முதல்வர் மற்றும் ஆசிரியர் ஆகிய மூவரையும் கைது செய்துள்ளனர்.