மக்களவைக்கு முன்கூட்டியே தேர்தல்: பிரதமர் மறுப்பு!

ஞாயிறு, 26 அக்டோபர் 2008 (03:31 IST)
மக்களவைக்கு முன்கூட்டியே தேர்தல் நடைபெறலாம் என்ற தகவல்களை மறுத்த பிரதமர் மன்மோகன் சிங், பொதுத் தேர்தல் திட்டமிட்ட காலத்திலேயே நடைபெறும் என்றும, நாடாளுமன்ற நடவடிக்கைகள் முன்கூட்டியே தள்ளிவைக்கப்பட்டதற்கும் இதற்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்றும் தெளிவுபடுத்தினார்.

PTI PhotoFILE
ஜப்பான், சீனாவுக்கான 5 நாள் சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு சிறப்பு விமானத்தில் நாடு திரும்புகையில், அவருடன் வந்த செய்தியாளர்களுக்கு பிரதமர் மன்மோகன் சிங் பேட்டியளித்தார்.

நாடாளுமன்றம் திட்டமிட்ட காலத்திற்கு முன்பாகவே தள்ளிவைக்கப்பட்டது மத்திய அரசின் தனிப்பட்ட முடிவு அல்ல என்றும், முக்கிய எதிர்க்கட்சி மற்றும் இதர கட்சிகளின் ஒருமித்த முடிவுக்கு பின்னரே அந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது என்றும் பிரதமர் அப்போது கூறினார்.

நாடாளுமன்ற உறுப்பினர்கள் விரும்பினால் நாடாளுமன்றக் கூட்டத்தை அடிக்கடி நடத்த வேண்டும் என்பதுதான் அரசின் விருப்பமும். ஆனால் இவ்விஷயத்தில் முக்கிய அரசியல் கட்சிகள் ஒன்றிணைந்து முடிவு எடுத்துள்ளன. அதனை அரசும் ஏற்றுக் கொண்டுள்ளது என நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டதற்கு பிரதமர் விளக்கமளித்தார்.

நாட்டின் 6 மாநிலங்களில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலுக்கு ஆயத்தம் ஆக வேண்டும் என்றும் கூறியதால், நாடாளுமன்றத்தை மீண்டும் டிசம்பரில் கூட்ட முடிவு செய்யப்பட்டது என்றார். மக்களவைத் தேர்தலில் போட்டியிடுவீர்களா என்று கேட்டதற்கு, நேரம் வரும் போது அதுகுறித்து முடிவு செய்யப்படும் என பதிலளித்தார்.