டெல்லியில் அகில இந்திய ஆயுர்வேத மருத்துவக் கழகம் : அமைச்சர் தகவல்!
வெள்ளி, 24 அக்டோபர் 2008 (17:45 IST)
டெல்லியில் அகில இந்திய ஆயுர்வேத மருத்துவக் கழகம் (AIIA) அமைக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளதாக மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநலத் துறை இணை அமைச்சர் பனபகா லட்சுமி தெரிவித்துள்ளார்.
இந்தக் கழகம் அடிப்படை ஆராய்ச்சி, மருந்து பாதுகாப்பினை மதிப்பிடுவது, தரநிலை, தரக்கட்டுப்பாடு மற்றும் ஆயுர்வேத மருந்தினை அறிவியல் ரீதியாக மதிப்பிடுவது போன்ற பணிகளில் கவனம் செலுத்தும்.
ஆயுர்வேத மருத்துவத்தில் முதுநிலை மற்றும் முனைவர் பட்டப்படிப்புகளும் இக்கழகத்தில் துவக்கப்படும். கழகத்துடன் இணைந்த, 200 படுக்கைகள் கொண்ட ஆராய்ச்சி வசதியுடைய மருத்துவமனையும் அமைக்கப்படவுள்ளது.
இந்த அகில இந்திய ஆயுர்வேத மருத்துவக் கழகம் 11-வது ஐந்தாண்டு திட்ட இறுதியில் அதாவது 2012 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் முழுமையாக செயல்படும். முதற்கட்டமாக 300 வெளிநோயாளிகளுக்கு தினமும் சிகிச்சையளிக்கப்படும் என்றும் கூறினார்.