தமிழக நகரங்களுக்கான மத்திய அரசு திட்டங்கள் : அமைச்சர் தகவல்!
வியாழன், 23 அக்டோபர் 2008 (18:36 IST)
ஜவஹர்லால் நேரு நகர்ப்புற புனரமைப்புத் திட்டம், சிறிய மற்றும் நடுத்தர நகரங்களுக்கான நகர்ப்புற உள்கட்டமைப்பு வளர்ச்சித் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை தமிழகத்தில் மத்திய அரசு செயல்படுத்தி வருவதாக மத்திய நகர்ப்புற வளர்ச்சித் துறை இணை அமைச்சர் அஜய் மாகேன் தெரிவித்துள்ளார்.
மாநிலங்களவையில் உறுப்பினர் எஸ்.அன்பழகன் எழுப்பிய கேள்விக்கு இன்று எழுத்து மூலம் பதில் அளித்த அமைச்சர் கடந்த 3 ஆண்டுகளாக இத்திட்டங்களுக்காக ஒதுக்கப்பட்ட மற்றும் செலவிடப்பட்ட நிதி விவரங்களை தெரிவித்துள்ளார்.
பெருநகரங்களுக்கான உள்கட்டமைப்பு வளர்ச்சித் திட்டத்திற்காக 2005-06ஆம் ஆண்டில் ரூ.42.04 கோடியும், 2006-07இல் ரூ.73.58 கோடியும் ஒதுக்கப்பட்டது. சிறிய மற்றும் நடுத்தர நகரங்களுக்கான ஒருங்கிணைந்த வளர்ச்சித் திட்டத்திற்காக 2005-06இல் ரூ.10.26 கோடியும், 2006-07இல் ரூ.10.21 கோடியும் மத்திய அரசு ஒதுக்கியது.
சிறிய மற்றும் நடுத்தர நகரங்களின் உள்கட்டமைப்பு வளர்ச்சித் திட்டத்திற்காக 2006-07இல் ரூ.121.68 கோடியும், 2007-08இல் ரூ.104.92 கோடியும் ஒதுக்கப்பட்டது.
ஜவஹர்லால் நேரு தேசிய நகர்ப்புற புனரமைப்புத் திட்டத்திற்காக ஒதுக்கப்பட்ட நிதி விவரங்கள்:
நகர்ப்புற உள்கட்டமைப்பு மற்றும் நிர்வாகத்திற்காக 2006-07இல் ரூ.129.13 கோடியும், 2007-08இல் ரூ.160.93 கோடியும் ஒதுக்கப்பட்டது. நகர்ப்புற ஏழைகளுக்கான அடிப்படை வசதிகளை மேற்கொள்வதற்கு 2006-07இல் ரூ.83 கோடியும், 2007-08இல் ரூ.132.16 கோடியும் ஒதுக்கப்பட்டது.
ஒருங்கிணைந்த வீட்டு வசதி மற்றும் குடிசைவாழ் பகுதிகள் வளர்ச்சித் திட்டத்திற்காக 2006-07இல் ரூ.43.37 கோடியும், 2007-08இல் ரூ.34.03 கோடியும் தமிழகத்திற்கு ஒதுக்கப்பட்டது.
தமிழக பெருநகரங்களில் உள்கட்டமைப்பு வசதி மேம்பாட்டுக்காக கடந்த மூன்றாண்டுகளில் ரூ.98.83 கோடி செலவிடப்பட்டுள்ளது. மத்திய அரசு ஒப்புதல் அளித்த 197 திட்டங்களில், 194 திட்டங்களை தமிழகம் நிறைவேற்றியுள்ளது. மீதியுள்ள திட்டங்களுக்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. இத்திட்டம் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 1ஆம் தேதியுடன் முடிவடைந்தது.
இந்திய நிர்வாக பணியாளர்கள் கல்லூரி மேற்கொண்ட மதிப்பீட்டில் இத்திட்டம் மேற்கொள்ளப்பட்ட நகரங்களில், சாலை வசதிகள், குடிநீர் விநியோகம், சுகாதார வசதிகள் கணிசமாக மேம்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.
சிறிய மற்றும் நடுத்தர நகரங்களின் ஒருங்கிணைந்த வளர்ச்சிக்கான மத்திய அரசின் திட்டத்தை தமிழகத்தில் செயல்படுத்த கடந்த 3 ஆண்டுகளில் ரூ.41.29 கோடி செலவிடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள 172 நகரங்கள் இத்திட்டத்தால் பயனடைந்துள்ளன.
நகர்ப்புற துரித குடிநீர் விநியோக திட்டம் ரூ.4.01 கோடி செலவில் கடந்த மூன்றாண்டுகளாக தமிழகத்தில் செயல்படுத்தப்படுகிறது. இதன் கீழ் வரும் 93 திட்டங்களில் 92 நிறைவடைந்துள்ளன. சில நகரங்களில் மாதிரிக்காக மேற்கொள்ளப்பட்ட சோதனையில் குடிநீரின் தரமும், விநியோகமும் மேம்பட்டுள்ளது திட்ட மதிப்பீட்டில் தெரியவந்துள்ளது.
தமிழ்நாட்டில் குடிநீர் பற்றாக்குறை பெரும் பிரச்னையாக உள்ளது. எனவே குடிநீர் விநியோகம் தொடர்பான திட்டங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு தற்போது செயல்படுத்தப்படுகிறது.
ஜவஹர்லால் நேரு தேசிய நகர்ப்புற புனரமைப்புத் திட்டத்தில், நகர்ப்புற உள்கட்டமைப்பு மற்றும் நிர்வாகத்திற்காக 29 திட்டங்களை செயல்படுத்த மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இவற்றில் 15 குடிநீர் விநியோகம் தொடர்பானவை. சிறிய மற்றும் நடுத்தர நகரங்களுக்கான உள்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ள 65 திட்டங்களில் 48 குடிநீர் விநியோகத்திற்கானவை என்று தெரிவித்துள்ளார்.