சந்திராயன்-1 பயணத்திற்கு மழையால் பாதிப்பில்லை: இஸ்ரோ!

புதன், 22 அக்டோபர் 2008 (00:39 IST)
தமிழகத்தில் தொடர் மழை காரணமாக இந்திய விண்வெளி ஆராய்ச்சியில் முக்கிய மைக்கல்லாகத் திகழப்போகும் சந்திராயன்-1 விண்கலத்தை ஏவுவதில் எந்தவித சிக்கலும் ஏற்படாது என இந்திய விண்வெளி ஆய்வுக் கழகம் (இஸ்ரோ) தெரிவித்துள்ளது.

இதுகுறித்து இஸ்ரோ இயக்குனர் கே.சதீஷ் யு.என்.ஐ செய்தி நிறுவனத்திற்கு நேற்றிரவு தொலைபேசியில் அளித்த பேட்டியில், தமிழகத்தில் மழை தொடர்ந்து பெய்தாலும் அதனால் சந்திராயன்-1 விண்கலத்தை ஏவுவதில் எந்த சிக்கலும் ஏற்படாது. ஆனால் இடி, மின்னல் காரணமாக சந்திராயன்-1 ஏவுவதில் தாமதம் ஏற்படலாம் என்று கூறினார்.

சென்னையை அடுத்த ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சத்தீஸ் தவான் விண்வெளி ஏவுதளத்தில் நிறுத்தப்பட்டுள்ள 44.4 மீட்டர் உயரமுடைய துருவ செயற்கைக்கோள் செலுத்து வாகனமான பி.எஸ்.எல்.வி. சி-11, சந்திராயன்-1 விண்கலத்தைத் தாங்கி புறப்படத் தயாராக நின்று கொண்டிருக்கிறது.

இன்று (அக்டோபர் 22ஆம் தேதி) காலை 06 மணி 20 நிமிடத்திற்கு பி.எஸ்.எல்.வி. சி-11 விண்ணில் பாயும் என இஸ்ரோ அறிவித்துள்ளது. என்றாலும் வானிலை மட்டுமே இதன் பயண நேரத்தை மாற்றலாம் என்றும் இஸ்ரோ கூறியுள்ளது.

நிலவை ஆய்வு செய்ய செலுத்தப்படும் சந்திராயன்-1இல் 11 முக்கிய கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. இவற்றில் 5 நமது நாட்டின் தயாரிப்புகள், மற்ற 6 அயல் நாட்டில் இருந்து பெறப்பட்டவை.

நிலவின் மேல்பரப்பை துல்லியமாக ஆராயப்போகும் சந்திராயன்-1, அதிலுள்ள கனிமங்கள், நீர் இருப்பு, இரசாயனப் பொருட்கள் ஆகியன மட்டுமின்றி ஹீலியம் தொடர்பான ஆய்வையும் மேற்கொள்ளும்.

வெப்துனியாவைப் படிக்கவும்