ராஜ்தாக்கரே-க்கு 2 வார நீதிமன்றக் காவல்

செவ்வாய், 21 அக்டோபர் 2008 (17:40 IST)
இன்று அதிகாலையில் கைது செய்யப்பட்ட மகாராஷ்டிர நவ நிர்மாண் சேனா அமைப்பின் தலைவர் ராஜ் தாக்கரேவை 2 வார காலம் நீதிமன்றக் காவலில் வைக்க பாந்த்ரா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பிற்பகலில் பாந்த்ரா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவரை 2 வார காலத்திற்கு நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து பலத்த பாதுகாப்புடன் ராஜ் தாக்கரே சிறையில் அடைக்கப்பட்டார்.

மும்பையில் ரயில்வே வாரியத் தேர்வு எழுதுவதற்காக வந்த வட இந்திய மாணவர்கள் மீது ராஜ் தாக்கரே தலைமையிலான மகாராஷ்டிர நவ நிர்மாண் சேனா அமைப்பைச் சேர்ந்தவர்கள் கடந்த ஞாயிறன்று தாக்குதல் நடத்தினர்.

இதையடுத்து ராஜ் தாக்கரே-வை கைது செய்ய வேண்டும் என்று தொடரப்பட்ட மனுவின் அடிப்படையில், அவருக்கு எதிராக கைது உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இதையடுத்து இன்று அதிகாலை மும்பை காவல்துறையினர் ராஜ்தாக்கரே-வைக் கைது செய்து, பிற்பகல் 3 மணியளவில் பாந்த்ரா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

சுமார் 200 பேர் அடங்கிய அதிரடிப்படையினர் நீதிமன்ற வளாகத்தில் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டிருந்தனர்.

ராஜ் தாக்கரே-வை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக அழைத்து வரும் முன்பே ஏராளமான ராஜ்தாக்கரே ஆதரவாளர்கள் நீதிமன்ற வளாகத்தின் முன்பு கூடியிருந்தனர். நண்பகல்வாக்கில் காவல்துறையினர் தடியடி நடத்தி மகாராஷ்டிர நவ நிர்மாண் சேனா அமைப்பினரைக் கலைத்தனர்.

காவல்துறையினரின் வாகனங்கள் மீது சிலர் கல்வீச்சு தாக்குதலில் ஈடுபட்டனர்.

ராஜ்தாக்கரே கைது செய்யப்பட்டதைக் கண்டித்து சில இடங்களில் கடைகள் அடைக்கப்பட்டன. வேறு சில இடங்களில் பள்ளிகள், கல்லூரிகள் மூடப்பட்டிருந்தன. புறநகர் ரயில்கள் சற்றே தாமதமாகச் சென்றன. சாலை போக்குவரத்தில் எவ்விதப் பாதிப்பும் இல்லை.

ஞாயிறன்று தாக்குதலைத் தொடர்ந்து ராஜ் தாக்கரே மற்றும் அவரது ஆதரவாளர்களுக்கு எதிராக வட- மேற்கு மும்பையில் அடங்கிய கேர்வாடி காவல் நிலையத்தில், வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

வெப்துனியாவைப் படிக்கவும்