அரசு ஐ.டி.ஐ.க்கள் மேம்படுத்தப்படும்: ஆஸ்கர் பெர்ணான்டஸ்!
திங்கள், 20 அக்டோபர் 2008 (19:02 IST)
நாட்டிலுள்ள 500 தொழிற் பயிற்சி மையங்கள் (ITIs) மேம்படுத்தப்படும் என்று மத்திய தொழிலாளர் நலன் மற்றும் வேலைவாய்ப்புத் துறை இணையமைச்சர் ஆஸ்கார் பெர்ணான்டஸ் தெரிவித்துள்ளார்.
மக்களவையில் இன்று எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அரசு தொழிற் பயிற்சி மையங்களில் படிக்கும் மாணவர்களின் தரத்தை உயர்த்தும் வகையில், 500 அரசு தொழிற் பயிற்சி மையங்கள் (ITIs) மேம்படுத்தப்படும். இவற்றில் 100 மையங்கள் உள்நாட்டு நிதியுதவியுடனும், 400 மையங்கள் உலக வங்கி உதவியுடனும் மேம்படுத்தப்படும்.
மீதமுள்ள 1,396 அரசு தொழிற் பயிற்சி மையங்கள் பொதுத்துறை, தனியார் கூட்டு முறை மூலம் மேம்படுத்தப்படும்.
சிக்கிம் மற்றும் ஜம்மு-காஷ்மீர் போன்ற வடகிழக்கு மாநிலங்களில் புதிய ஐ.டி.ஐ.-க்கள் நிறுவப்படும் மற்றும் தற்போதுள்ள ஐ.டி.ஐ.-க்கள் வலுப்படுத்தப்படும்.
நாடு முழுவதும் 1,500 ஐ.டி.ஐ.-க்கள் மற்றும் 5,000 திறன் மேம்பாட்டு மையங்கள் அமைக்க திட்ட ஆணையம் ஒப்புதல் வழங்கியுள்ளது என்று தெரிவித்தார்.