பாஜக எம்.பி-யை நீக்க மக்களவைக் குழு பரிந்துரை

திங்கள், 20 அக்டோபர் 2008 (18:17 IST)
ஆட்கடத்தல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த பாபுபாய் கட்டாராவை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்க மக்களவை குழு பரிந்துரைத்துள்ளது.

உறுப்பினர்களின் தவறான நடத்தை குறித்து விசாரணை நடத்தும், மூத்த காங்கிரஸ் தலைவர் வி. கிஷோர் சந்திர தியோ தலைமையிலான மக்களவைக் குழு அளித்துள்ள பரிந்துரையில் கட்டாராவை பதவி நீக்கம் செய்வதுடன் கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது.

மிக மோசமான நடத்தையில் கடாரா ஈடுபட்டுள்ளதாகவும், அவையின் கண்ணியத்தை மீறி அவர் செயல்பட்டிருப்பதாகவும் கூறியிருக்கும் அக்குழு, நாடாளுமன்றத்தின் நம்பகத்தன்மையை அழிக்கும் வகையில் அவரது செயல்பாடு இருந்ததாக்க் குறிப்பிட்டுள்ளது.

இந்தக் குழுவின் அறிக்கை மக்களவைத் தலைவரிடம் இன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத்தில் மத்திய அரசின் மீதான நம்பிக்கை வாக்கெடுப்பின் போது, அரசுக்கு ஆதரவாக வாக்களித்தார் என்று கூறி, கட்டாராவை உறுப்பினர் பதவி நீக்கம் செய்வதற்கு பாஜக ஏற்கனவே கோரிக்கை விடுத்திருந்த நிலையில், மக்களவைக் குழுவும் பரிந்துரைத்திருப்பதால், கட்டாரா பதவி இழப்பது ஏறக்குறைய உறுதி செய்யப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்