சந்திராயன்-1 புறப்பாட்டு நேர கணக்கீடு துவங்கியது!

திங்கள், 20 அக்டோபர் 2008 (17:06 IST)
இந்திய விண்வெளி ஆராய்ச்சியில் முக்கிய மைக்கல்லாகத் திகழப்போகும் நிலவை ஆய்வு செய்ய செலுத்தப்படவுள்ள சந்திராயன்-1 விண்கலத்தை விண்ணில் செலுத்தவுள்ள துருவ செயற்கைக்கோள் செலுத்து வாகனத்தின் 52 மணி புறப்பாட்டு நேர கணக்கீடு இன்று காலை துவங்கியது!

சென்னையை அடுத்த ஸ்ரீஹரிகோட்டாவிலுள்ள சத்தீஸ் தவான் விண்வெளி ஏவுதளத்தில் நிறுத்தப்பட்டுள்ள 44.4 மீட்டர் உயரமுடைய துருவ செயற்கைக்கோள் செலுத்த வாகனமான பி.எஸ்.எல்.வி. சி-11 சந்திராயன் விண்கலத்தைத் தாங்கி புறப்படத் தயாராக நின்றுகொண்டிருக்கிறது.

நாளை மறுநாள், அக்டோபர் 22ஆம் தேதி, புதன் கிழமை காலை 06 மணி 20 நிமிடத்திற்கு பி.எஸ்.எல்.வி. சி-11 விண்ணில் பாய்கிறது. புறப்பாட்டிற்கான சோதனைகள் நடத்தப்பட்டபோது ஒரு சிறிய சிக்கல் கண்டுபிடிக்கப்பட்டு அது சரி செய்யப்பட்டதெனவும், தற்பொழுது புறப்படுவதற்கான தயார் நிலையில் இருப்பதாகவும் தெரிவித்துள்ள இஸ்ரோ, வானிலை மட்டுமே இத்திட்டத்தை மாற்றலாம் என்று கூறியுள்ளது.

நிலவை ஆய்வு செய்ய செலுத்தப்படும் சந்திராயன்-1இல் 11 முக்கிய கருவிகள் பொறுத்தப்பட்டுள்ளன. இவற்றில் 5 நமது நாட்டின் தயாரிப்புகள், மற்ற 6 அயல் நாட்டில் இருந்து பெறப்பட்டவை.

நிலவின் மேல்பரப்பை துல்லியமாக ஆராயப்போகும் சந்திராயன்-1, அதிலுள்ள கனிமங்கள், நீர் இருப்பு, இரசாயணப் பொருட்கள் ஆகியன மட்டுமின்றி ஹீலியம் தொடர்பான ஆய்வையும் மேற்கொள்ளும்.

வெப்துனியாவைப் படிக்கவும்