தேர்தல் தேதி அறிவிப்பதில் பெரும் இழு பறியாக இருந்த ஜம்மு-காஷ்மீர் மாநில சட்டப்பேரவைக்கான தேர்தல் 7 கட்டமாக நடைபெறுகிறது. முதல் கட்ட தேர்தல் வரும் நவம்பர் மாதம் 7ஆம் தேதி நடைபெறுகிறது. இதற்கான தேர்தல் அட்டவணையை தேர்தல் ஆணையம் இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
புதுடெல்லியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய தலைமை தேர்தல் ஆணையர் என். கோபாலசாமி, தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினவர்களுக்கு ஒதுக்கப்பட்ட 7 தொகுதி உள்பட 87 தொகுதி கொண்ட ஜம்மு- காஷ்மீர் மாநில சட்டப்பேரவைக்கான தேர்தல் 7 கட்டமாக நடைபெறுவதாக அறிவித்தார்.
மேலும் தேர்தல் நடத்தை விதிமுறைகள், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட இன்று முதல் உடனடியாக அமலுக்கு வருகிறது என்றும் அவர் தெரிவித்தார்.
அதன்படி, முதல் கட்ட தேர்தல் அடுத்த மாதம் (நவம்பர்) 17ஆம் தேதியும், 7-வது மற்றும் இறுதிக் கட்டத் தேர்தல் டிசம்பர் மாதம் 24ஆம் தேதியும் நடக்கிறது. அனைத்து தொகுதிகளுக்குமான வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 28ஆம் தேதி ஒரே சமயத்தில் எண்ணப்படுகிறது. தேர்தல் ஆணையத்தின் அனைத்துப் பணிகளும் டிசம்பர் 31ஆம் தேதி நிறைவடைகிறது என்று கூறினார்.
மொத்தம் 65,38,111 பேர் இத்தேர்தலில் வாக்களிக்க தகுதியுடையவர்கள். தேர்தலில் மின்னணு வாக்குப் பதிவு எந்திரங்கள் பயன்படுத்தப்படுகிறது. மொத்தம் 8,901 வாக்குப் பதிவு மையங்கள் அமைக்கப்படுகிறது என்றும் அவர் தெரிவித்தார்.
முதல்கட்ட தேர்தல் (10 தொகுதிகள்) நவம்பர் 17ஆம் தேதி: வேட்புமனுதாக்கல் செய்ய கடைசி நாள் அக்டோபர் 31, வேட்பு மனு பரிசீலனை அக்டோபர் 31ஆம் தேதி, வேட்பு மனுவை விலக்கிக்கொள்ள கடைசி நாள் நவம்பர் 3ஆம் தேதி ஆகும்.
2-வது கட்டமாக நவம்பர் 23ஆம் தேதி 6 தொகுதிகளுக்கும், 3-வது கட்டமாக நவம்பர் 30ஆம் தேதி 5 தொகுதிகளுக்கும், 4-வது கட்டமாக டிசம்பர் 7ஆம் தேதி 18 தொகுதிகளுக்கும், 5-வது கட்டமாக டிசம்பர் 13ஆம் தேதி 11 தொகுதிகளுக்கும், 6-வது கட்டமாக டிசம்பர் 17ஆம் தேதி 16 தொகுதிகளுக்கும், 7-வது மற்றும் இறுதிக் கட்டமாக டிசம்பர் 24ஆம் தேதி 21 தொகுதிகளுக்கும் தேர்தல்கள் நடைபெற உள்ளன.
கார்கில் மற்றும் லே பகுதி வாக்காளர்கள் முதல் கட்ட தேர்தலிலும், ஜம்மு மற்றும் ஸ்ரீநகர் பகுதி வாக்காளர்கள் 7-வது மற்றும் இறுதிக்கட்ட தேர்தலிலும் வாக்களிக்க உள்ளனர்.
அமர்நாத் நில விவகாரம் தொடர்பாக ஜம்மு-காஷ்மீரில் முதல்வர் குலாம் நபி ஆசாத் தலைமையிலான காங்கிரஸ் அரசுக்கு அளித்து வந்த ஆதரவை முக்கிய கூட்டணி கட்சியான மக்கள் ஜனநாயக கட்சி (PDP) விலக்கிக் கொண்டதையடுத்து ஆசாத் அரசு பெரும்பான்மையை இழந்தது.
இதனால், முதல்வர் குலாம் நபி ஆசாத் பதவி விலகியதையடுத்து கடந்த ஜூலை 7ஆம் தேதி முதல் அம்மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி நடந்து வருகிறது.
முன்னதாக கடந்த வாரம் சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், டெல்லி மிசோராம், ராஜஸ்தான் சட்டப்பேரவைக்கான தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் அறிவித்தது.
ஆனால், ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் அமர்நாத் நிலப் பிரச்சினை தொடர்பாக அங்கு நிலைமை இன்னும் சீரடையாததை காரணம் காட்டி தற்போது தேர்தல் நடத்தினாலும் குறைந்த அளவே வாக்குப் பதிவாகும் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தேர்தல் ஆணையம் தேர்தல் தேதியை அறிவிக்காமல் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.