அணுசக்தி, பயங்கரவாதத்தால் அமளி: மாநிலங்களவை 20ஆம் தேதிக்கு தள்ளிவைப்பு!
வெள்ளி, 17 அக்டோபர் 2008 (13:56 IST)
அமெரிக்காவுடனான அணு சக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தம், நாட்டில் பெருகி வரும் பயங்கரவாதம் ஆகிய பிரச்சனைகளை எழுப்பி இடதுசாரி, பாஜக உறுப்பினர்கள் கூச்சலிட்டதால் மாநிலங்களவையில் அமளி ஏற்பட்டது. இதையடுத்து மாநிலங்களவை நடவடிக்கைகள் 20ஆம் தேதி காலை வரை தள்ளிவைக்கப்படுவதாக அவைத்தலைவர் ஹமீத் அன்சாரி அறிவித்தார்.
நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் இன்று காலை துவங்கி பின்னர், எதிர்க் கட்சியினரின் அமளியால் 11.30 மணிக்கு தள்ளிவைக்கப்பட்ட மாநிலங்களவை நடவடிக்கைகள், மீண்டும் நண்பகல் 12 மணிக்கு துவங்கியது.
அப்போது பிருந்தா காரத் தலைமையிலான இடதுசாரி கட்சி உறுப்பினர்கள், அமெரிக்கா உடனான 123 ஒத்துழைப்பு ஒப்பந்தத்தை இறுதி செய்வதற்கு முன்னர் மாநிலங்களவையின் ஒத்துழைப்பைப் பெறத் தவறிய பிரதமர் மன்மோகன் சிங் மீது உரிமை மீறல் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரினர்.
இதைத்தொடர்ந்து பா.ஜ.க உறுப்பினர்களான முரளி மனோகர் ஜோஷி, எஸ்.எஸ்.அலுவாலியா ஆகியோர் பயங்கரவாத விவகாரங்களை விவாதத்திற்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என வலியுறுத்தினர். அப்போது பேசிய ஜோஷி, பயங்கரவாதம் நாளுக்கு நாள் பெருகி வருவதால், அதனை மாநிலங்களவையில் விவாதிக்காமல் ஒதுக்க முடியாது என்றார்.
அப்போது உறுப்பினர் ருத்ரபிரசாத் பானி, 356வது பிரிவைப் பயன்படுத்தி மாநில அரசுகளை மத்திய அரசு கலைக்கக் கூடாது என்று வலியுறுத்தி கூச்சலிட்டார். அவருக்கு ஆதரவாக மற்ற உறுப்பினர்களும் அமளியில் ஈடுபட்டதைத் தொடர்ந்து மாநிலங்களவை நடவடிக்கைகளை வரும் திங்கட்கிழமை காலை வரை தள்ளிவைப்பதாக அவைத்தலைவர் ஹமீத் அன்சாரி அறிவித்தார்.