பீடி, சிகெரட் பாக்கெட்டுகளில் எச்சரிக்கை வாசகம் : நவ.30இ‌ல் சட்டம் அமல்!

வியாழன், 16 அக்டோபர் 2008 (17:38 IST)
பீடி, சிகரெட் பாக்கெட்டுகளில் எச்சரிக்கை வாசகங்கள் இடம் பெறுவது குறித்த சட்டத்தில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இது நவம்பர் 30ஆ‌ம் தேதி அமலுக்கு வருகிறது.

சிகரெட், பீடி உள்ளிட்ட புகையிலை பண்டல்கள், பாக்கெட்டுகளில் எச்சரிக்கை வாசகங்கள் கட்டாயம் வைக்கப்பட வேண்டும் என்பது குறித்த உத்தரவை மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் கடந்த மார்ச் 15ஆ‌ம் தேதி வெளியிட்டது.

இந்த உத்தரவுகளால் தங்கள் தொழில் பாதிக்கப்படும் என்று அகில இந்திய பீடி தொழில் கூட்டமைப்பு உள்ளிட்ட சங்கங்கள் கூறின. இது தொடர்பாக உத்தரவில் திருத்தம் செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்தன. இதை ஏற்றுக் கொண்ட சுகாதார அமைச்சகம் உத்தரவில் சில மாற்றங்களை செய்துள்ளது. பீடி, சிகரெட் பாக்கெட்டுகளில் மட்டும் எச்சரிக்கை வாசகங்கள் இடம் பெற்றால் போதும். அவை கொண்டு வரப்படும் சாக்குப் பைகளில் இடம் பெற தேவையில்லை.

மேலும், அந்த எச்சரிக்கை வாசகங்களும் அந்த பாக்கெட்டில் இருக்கும் மொழியிலேயே இருக்கலாம். ஒன்றுக்கு மேற்பட்ட மொழிகள் பயன்படுத்தப்பட்டிருந்தால், அந்த புகையிலைப் பொருளின் பிராண்ட் பெயர் எழுதப்பட்டிருக்கும் மொழி மற்றும் அந்த பாக்கெட் விற்கப்படும் பகுதியின் வட்டார மொழி ஆகிய இரு மொழிகளில் எச்சரிக்கை வாசகங்கள் அமைய வேண்டும்.

இந்த மாற்றங்களுடன் உத்தரவு நவம்பர் 30ஆ‌ம் தேதி அமல்படுத்தப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்