இந்திய மாலுமிகளை விடுவிக்க வேண்டும் : டி.ஆர்.பாலு வேண்டுகோள்!
புதன், 15 அக்டோபர் 2008 (17:51 IST)
தென்கொரிய சிறையில் அடைக்கப்பட்டுள்ள 2 இந்திய மாலுமிகளை விடுவிக்கவேண்டும் என்று அந்நாட்டு கடல் விவகாரத்துறை அமைச்சரிடம் மத்திய கப்பல் சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் டி.ஆர். பாலு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஹாங்காங் நாட்டை சேர்ந்த 'ஹெபேய் ஸ்பிரிட்' என்ற எண்ணெய் சரக்கு கப்பல் கடந்த ஆண்டு டிசம்பர் 7ஆம் தேதி தென் கொரியாவின் டேசான் துறைமுகம் அருகே நின்றிருந்தது. அப்போது, தென் கொரியாவை சேர்ந்த 'சாம்சங் நம்பர் ஒன்' என்ற படகு அதன் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் டேங்கர் கப்பலில் இருந்த எண்ணெய், அதிகளவில் கடலில் கொட்டியது.
பணியில் கவனக்குறைவாக இருந்து கடல் நீரை மாசுபடுத்தியதாக இந்தியாவை சேர்ந்த, டேங்கர் கப்பலின் கேப்டன் ஜஸ்பிரித் சிங் சாவ்லா, தலைமை அதிகாரி ஷியாம் சேட்டன் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த டேஜான் மாவட்ட நீதிமன்றம், டேங்கர் கப்பல் மீது மோதிய படகு மற்றும் அதில் இருந்த கிரேன் தொழிலாளர்களே இந்த விபத்துக்கு காரணம் என்றும் ஹாங்காங் கப்பல் நிறுவனத்தை சேர்ந்த இந்திய மாலுமிகள் இருவரும் குற்றமற்றவர்கள் என்றும் தீர்ப்பு கூறியது. ஆனாலும், அவர்கள் தென் கொரியாவை விட்டு வெளியேற அனுமதி வழங்கப்படவில்லை.
இந்நிலையில், தற்போது தென்கொரியா சென்றுள்ள அமைச்சர் டி. ஆர். பாலு, தலைநகர் சியோலில் அந்நாட்டு தரைவழிப் போக்குவரத்து மற்றும் கடல் விவகாரத் துறை அமைச்சர் ஜாங் யுவான் சுங்கை சந்தித்து இந்திய மாலுமிகளை விடுவிக்குமாறு வேண்டுகோள் விடுத்தார்.
இதற்கு பதிலளித்த தென் கொரிய அமைச்சர், கடல்நீர் மாசுபட்டது என்ற கண்ணோட்டத்திலேயே இந்த வழக்கை கையாண்டுள்ளோம். மனிதாபிமான அடிப்படையில் முழுமையாக அணுகவில்லை. நீண்டகாலமாக நீடிக்கும் இந்த விவகாரத்தை தென்கொரிய அரசின் உரிய அமைச்சகங்களின் பார்வைக்கு கொண்டு சென்று இந்திய மாலுமிகள் விரைவில் நாடு திரும்ப நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளார்.