டெல்லி, ம.பி. உட்பட 5 மாநில தேர்தல் தேதி அறிவிப்பு

செவ்வாய், 14 அக்டோபர் 2008 (12:49 IST)
டெல்லி உட்பட 5 மாநிலங்களின் சட்டப்பேரவைத் தேர்தல் தேதிகளை தலைமைத் தேர்தல் ஆணையம் இன்று அறிவித்துள்ளது.

டெல்லி, மத்தியப் பிரதேசம், சட்டீஸ்கர், ராஜஸ்தான், மிஜோராம் ஆகிய மாநில சட்டப்பேரவைகளின் பதவிக்காலம் அடுத்தடுத்து முடிவடைவதைத் தொடர்ந்து, அங்கு நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் தேர்தல் நடைபெறுவதாக தலைமைத் தேர்தல் ஆணையர் தேர்தல் நடைபெறுகிறது.

சட்டீஸ்கர் மாநிலத்தில் மட்டுமே 2 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. சட்டீஸ்கரில் அடுத்த மாதம் (நவம்பர்) 14 மற்றும் 20 ஆகிய தேதிகளில் தேர்தல் நடைபெறும்.

மத்தியப் பிரதேசத்தில் நவம்பர் 25ஆம் தேதியும், மிஜோராம் மற்றும் டெல்லியில் நவம்பர் 29ஆம் தேதியும் ஒரே கட்டமாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறும் என்று தலைமைத் தேர்தல் ஆணையர் என். கோபாலசாமி புதுடெல்லியில் இன்று அறிவித்தார்.

ராஜஸ்தான் மாநிலத்தில் டிசம்பர் 4ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறும் என்று அவர் கூறினார்.

இந்த 5 மாநிலங்களிலும் பதிவாகும் வாக்குகள் வரும் டிசம்பர் 8ஆம் தேதி எண்ணப்படும் என்று கோபாலசாமி தெரிவித்தார்.

ஜம்மு-காஷ்மீர் மாநில சட்டப்பேரவைத் தேர்தல் குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை.

தேர்தலை நடத்துவதற்காக பாதுகாப்புப் படையினரின் வசதிகள் குறித்து மத்திய உள்துறை செயலாளர் மதுக்கர் குப்தா, தேர்தல் ஆணையத்திடம் கடந்த வெள்ளிக்கிழமையே தெரிவித்து விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்