உத்தரப் பிரதேசத்தின் ரேபரேலி தொகுதியில் உள்ள லால்கன்ஜ் பகுதியில் இன்று நடைபெறுவதாக இருந்த சோனியாவின் பேரணியை முடக்க மாயாவதி அரசு தீவிர முயற்சி மேற்கொண்டதால், அப்பேரணியை சோனியா காந்தி ரத்து செய்துள்ளார்.
சோனியாவின் மக்களவைத் தொகுதியான ரேபரேலியில் ரயில் பெட்டி உற்பத்தித் தொழிற்சாலை அமைக்க வேண்டும் என்பதே அவரது நீண்ட நாள் கனவு. இதற்கு முந்தைய உ.பி. அரசும் நிலம் வழங்கியிருந்தது.
ரயில் பெட்டி உற்பத்தி தொழிற்சாலைக்கான அடிக்கல் நாட்டு விழாவை சோனியா துவக்கி வைப்பார் என்று அறிவிப்பு வெளியானதும், அதற்காக மாநில அரசு நிலம் வழங்கிய உத்தரவை அம்மாநில முதல்வர் மாயாவதி ரத்து செய்தார்.
இதையடுத்து அலகாபாத் நீதிமன்றத்தில் ரயில்வேத்துறை சார்பில் வழக்கு தொடரப்பட்டது. அதனை விசாரித்த நீதிபதிகள் வழங்கிய அரசு நிலத்தை ரத்து செய்ததற்கான மாயாவதியின் உத்தரவிற்கு இடைக்காலத் தடை விதித்தனர்.
இந்நிலையில், இன்று லால்கன்ஜ் பகுதியில் நடைபெறும் பேரணியில் சோனியா பங்கேற்றுப் பேசுவார் என்பதால், அப்பேரணியை முடக்க பல்வேறு தடை உத்தரவுகளை ரேபரேலியில் பிறப்பிப்பதை அறிந்த சோனியா பேரணியை ரத்து செய்ததாக காங்கிரஸ் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக உத்தரபிரதேச காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் அகிலேஷ் பிரதாப் சிங் செய்தியாளர்களிடம் பேசுகையில், லால்கன்ஜ் பேரணியை சோனியா ரத்து செய்தாலும், ரேபரேலி தொகுதியில் மேற்கொள்வதாக இருந்த சுற்றுப்பயணத்தை தொடருவார் என்று கூறினார்.