அணு சக்தி ஒப்பந்தத்தை எதிர்த்து நாடாளுமன்ற வளாகத்தில் தர்ணா: இடதுசாரிகள் அறிவிப்பு!
புதன், 24 செப்டம்பர் 2008 (18:24 IST)
நாடாளுமன்றத்தை திட்டமிட்டபடி கூட்டாததைக் கண்டித்தும், அணு சக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தம் நடைமுறைப்படுத்தப்படுவதை எதிர்த்தும் பகுஜன் சமாஜ் கட்சி, தெலுங்கு தேசம் கட்சி, ஐக்கிய ஜனதா தளம் ஆகியவற்றுடன் இணைந்து நாளை நாடாளுமன்ற வளாகத்தில் தர்ணா நடத்தப்படும் என்று இடதுசாரிகள் அறிவித்துள்ளனர்.
இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இன்று விடுத்துள்ள அறிக்கையில், தொடர் குண்டு வெடிப்புகள் போன்ற பயங்கரவாத தாக்குதல்கள், சிறுபான்மையினருக்கு எதிரான கலவரங்கள், விலைவாசி உயர்வு ஆகியவை உள்ளிட்ட பல்வேறு முக்கியப் பிரச்சனைகளை நமது நாடு சந்தித்து வரும் நிலையில் மத்திய அரசு திட்டமிட்டபடி நாடாளுமன்றத்தைக் கூட்டாமல் தள்ளிப்போட்டுள்ளதைக் கண்டித்து தர்ணா போராட்டம் நடத்தப்படும்.
அணு சக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்தும் முன்பு நமது நாடாளுமன்றத்தில் மீண்டும் விவாதம் நடத்தப்படும் என்று தான் அளித்த உறுதி மொழியைத் தானே மீறும் வகையில் அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ்-ஐச் சந்திக்கும் பிரதமர் மன்மோகன் சிங்கின் நடவடிக்கை எதிர்த்தும் இந்தப் போராட்டட் நடக்கிறது.
இந்தப் போராட்டத்தில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, புரட்சிகர சோசலிசக் கட்சி, அகில இந்திய ஃபார்வார்ட் பிளாக் ஆகிய இடதுசாரி கட்சிகளுடன் பகுஜன் சமாஜ் கட்சி, தெலுங்கு தேசம் கட்சி, ஐக்கிய ஜனதா தளம் ஆகிய கட்சிகளும் பங்கேற்கும் என்று கூறப்பட்டுள்ளது.