ஒரிசாவில் கலவரம்: துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலி!
புதன், 24 செப்டம்பர் 2008 (13:58 IST)
ஒரிசாவில் மதக் கலவரம் தொடர்பாகக் கைது செய்யப்பட்டுள்ள கிராமத்தவர் இருவரை விடுதலை செய்ய வேண்டும் என்று போராடிய பழங்குடியினரைக் கலைப்பதற்காக காவலர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் கொல்லப்பட்டதுடன், மேலும் பலர் படுகாயமடைந்துள்ளனர்.
ஒரிசாவில் கலவரங்களால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள கந்தமால் மாவட்டத்தில் உள்ள ராய்கியா காவல் நிலையத்தில், கலவரம் தொடர்பாகப் பலர் கைது செய்யப்பட்டு அடைக்கப்பட்டுள்ளனர்.
இவர்களில் தங்கள் கிராமத்தவர் இருவரை விடுவிக்க வேண்டும் என்று கோரி ராய்கியா கிராமத்தில் வசிக்கும் பழங்குடியினர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர். பாதுகாப்பிற்கு குவிக்கப்பட்டிருந்த காவலர்கள் பழங்குடியினரைத் தடுத்துக் கலைந்து செல்லுமாறு அறிவுறுத்தினர்.
அதற்குள் மேலும் நூற்றுக்கணக்கான பழங்குடியினர் கத்தி, இரும்புக் கம்பிகள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் குவிந்து, காவலர்களுடன் வாய்த் தகராறில் ஈடுபட்டதால் பதற்றம் அதிகரித்தது. இதையடுத்து மத்திய ரிசர்வ் காவல் படையினர் குவிக்கப்பட்டனர்.
அப்போது பழங்குடியினர் சிலர் காவலர்களைத் தாக்கியதாகவும், கற்களை வீசியவாறே காவல் நிலையத்திற்குள் நுழைந்து கைதிகளை விடுவிக்க முயன்றுள்ளனர். அவர்களைத் தடுப்பதற்காக காவலர்கள் நடத்திய தடியடி பலனளிக்கவில்லை.
இதையடுத்து முதலில் கண்ணீர்ப் புகை குண்டுகளை வீசியதாகவும், பின்னர் வானை நோக்கித் துப்பாக்கிச்சூடு நடத்தியதாகவும் இவை இரண்டும் பலனளிக்காத காரணத்தால் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதாகவும் காவல் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதில் பழங்குடியினர் ஒருவர் பலியானதுடன், பலர் படுகாயமடைந்தனர்.
இதற்கிடையில் ஆத்திரமடைந்த பழங்குடியினர் மரங்களை வெட்டிச் சாலையில் போட்டுப் போக்குவரத்தைத் தடை செய்ததாகவும் காவலர்கள் தெரிவித்தனர்.