அஸ்ஸாமில் விஷவாயு தாக்கி 25 பேர் பலி!

சனி, 20 செப்டம்பர் 2008 (12:21 IST)
அஸ்ஸாமின் கரிபி அங்லாங் மாவட்டத்தில் உள்ள சைதிங் பகுதியில் நின்றிருந்த சரக்கு ரயிலில் இருந்து கச்சா எண்ணெய் திருட முயன்ற போது விஷ வாயு தாக்கியதில் 25 பேர் உயிரிழந்துள்ளனர்.

நேற்றிரவு நடந்த இந்த நிகழ்வில் விஷவாயு தாக்கியதால் பாதிக்கப்பட்ட 40க்கும் அதிகமானோர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ தகவலின் படி, 70க்கும் அதிகமானோர் கொண்ட கும்பல் தான்சிரி-ரங்கப்பஹார் ரயில் நிலையத்திற்கு இடையே உள்ள சைதிங் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த சரக்கு ரயிலில் வந்த கச்சா எண்ணெய்யை திருட முயன்றுள்ளனர்.

அந்த ரயிலில் உயர் அழுத்த விமான எரிபொருள் (Aviation Turbine Fuel - ATF) இருந்ததால், சரக்கு வாகனின் மூடியைத் திறந்ததும் விஷவாயு வெளியேறியுள்ளது. இதில் அருகிலிருந்த 20 பேர் மூச்சுத் திணறி உயிரிழந்தனர். மேலும் அருகிலிருந்த இருந்த 45க்கும் அதிகமானோர் விஷவாயு தாக்குதலுக்கு உள்ளாகினர்.

நாகாலாந்து-அசாம் எல்லைப்பகுதியில் நடந்த இந்த நிகழ்வில் நாகாலாந்தைச் சேர்ந்த 6 பேர் உயிரிழந்துள்ளதாக திமாப்பூர் காவல் ஆய்வாளர் லிரெமோ லோதா செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

விஷவாயு தாக்குதலுக்கு உள்ளானவர்கள் அருகில் உள்ள திமாப்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நிகழ்விடத்தில் இருந்து இதுவரை 20 உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் சூரிய உதயத்திற்கு முன்பாகவே சுற்றுப்பகுதி மக்கள் அங்கிருந்த சில உடல்களை எடுத்துச் சென்று விட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

வெப்துனியாவைப் படிக்கவும்