துப்பாக்கிச் சண்டையில் பலியான ஆய்வாளர் சர்மா உடல் இன்று தகனம்
சனி, 20 செப்டம்பர் 2008 (15:12 IST)
புதுடெல்லியில் ஜாமியா நகர் பகுதியில் நேற்று நடைபெற்ற தீவிரவாதிகளுக்கு எதிரான தாக்குதலின்போது பலியான டெல்லி சிறப்புப் பிரிவு காவல்துறை ஆய்வாளர் மோகன் சந்த் சர்மாவின் உடல் இன்று தகனம் செய்யப்படுகிறது.
துப்பாக்கிச் சூடு நடத்துவதற்கு முன்பாக நேற்று சர்மா, டெங்கு காய்ச்சலால் கர்லா மருத்துவமனையில் சிகிச்சை பெறும் தனது மகனைப் பார்க்கச் சென்றுள்ளார். அதுவே அவரது மகனை பார்ப்பது கடைசி என்பது அப்போது அவருக்குத் தெரியாமல் போனதாக குடும்பத்தினர் வருத்தத்துடன் கூறினர்.
டெல்லி தொடர் குண்டுவெடிப்பில் தொடர்புடைய தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக தகவல் வந்ததைத் தொடர்ந்து, மோகன் சந்த சர்மாவும், அவரது சிறப்புக் காவல் பிரிவைச் சேர்ந்த படையினரும் ஜாமியா நகரில் அந்த வீட்டை முற்றுகையிட்டு துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
2 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். மேலும் இருவர் தப்பி விட்டதாகவும், மற்றொரு தீவிரவாதியை காவல்துறையினர் பிடித்து விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் காவல்துறை ஆணையர் தெரிவித்துள்ளார்.
இந்த மோதலில் பலத்த காயம் அடைந்த 2 பேரில் சர்மாவும் ஒருவர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் நேற்று மாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
உயிரிழந்த சர்மாவிற்கு மனைவியும், ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். மகன் 8ஆம் வகுப்பும், மகள் 7ஆம் வகுப்பும் படித்து வருகிறார்கள்.
உயிரிழந்த சர்மாவின் உடல் பிரேத பரிசோதனைக்காக டெல்லி அகில இந்திய விஞ்ஞான மருத்துவ கழகத்திற்கு அனுப்பப்பட்டது. அநேகமாக இன்று சர்மா உடல் தகனம் செய்யப்படும் என்று குடும்பத்தினர் தெரிவித்தனர்.
டெல்லி சிறப்புக் காவல்படையில் திறமையாகப் பணியாற்றிய சர்மா, ஜம்மு-காஷ்மீரில் மத்தியப் படையினருடன் தீவிரவாதிகளுக்கு எதிரான துப்பாக்கிச் சண்டையில் பங்கேற்று, உயர் அதிகாரிகளின் பாராட்டைப் பெற்றவர்.
தீவிரவாதிகள் குறித்த பயனுள்ள தகவல்களை தெரிவிப்பதற்காக விரிவான ஒருங்கிணைப்பை சர்மா ஏற்படுத்தி வைத்திருந்ததாகவும் காவல்துறை உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.