டெல்லி, அகமதாபாத் குண்டுவெடிப்பில் தொடர்புடைய 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை!

சனி, 20 செப்டம்பர் 2008 (11:12 IST)
தலைநகர் டெல்லியில் கடந்த சனிக்கிழமை நடந்த தொடர்குண்டு வெடிப்பிலும், கடந்த ஜூலை மாதம் அகமதாபாத்தில் நடந்த தொடர்குண்டு வெடிப்பிலும் தொடர்புடைய 2 தீவிரவாதிகளை டெல்லி காவல் துறையினர் சுட்டுக்கொன்றனர்.

தெற்கு டெல்லியில் உள்ள ஜாமியா நகர் எனுமிடத்தில் உள்ள ஒரு வீட்டில் இவர்கள் தங்கியிருந்ததை அறிந்த டெல்லி காவல் துறையின் சிறப்புப் பிரிவு காவலர்கள், இன்று காலை அவ்விடத்தை சுற்றி வளைத்தபோது காவலர்களை நோக்கி தீவிரவாதிகள் துப்பாக்கியால் சுட்டதாகவும், இதனைத் தொடர்ந்து நடந்த துப்பாக்கிச் சண்டையில் 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டதாகவும், மேலும் ஒரு தீவிரவாதி பிடிபட்டதாகவும் கூடுதல் ஆணையர் கர்னால் சிங் கூறினார்.

இந்த மோதலில் தீவிரவாதிகளின் தாக்குதலில் இரண்டு காவலர்கள் காயமுற்றனர். அவர்களில் ஒருவரான சிறப்புப் பிரிவு ஆய்வாளர் மோகன் சந்த் சர்மா, சிகிச்சை பலனின்றி இன்று மாலை மருத்துவமனையில் உயிரிழந்தார். தலைமைக் காவலரான பல்வந்த் குண்டுக் காயத்துடன் சிகிச்சை பெற்றுவருகிறார்.

காவலர்களால் சுட்டுக்கொல்லப்பட்ட தீவிரவாதிகளில் ஒருவன் பெயர் அடிக் என்கிற பாஷர், மற்றொருவன் பெயர் ஃபக்ருதீன். இவர்கள் இருவரும் ஹூஜி என்றழைக்கப்படும் ஹர்கத் உல் ஜிஹாதி இஸ்லாமியா எனும் இயக்கதின் உறுப்பினர்கள் என்றும், தடை செய்யப்பட்டுள்ள சிமி இயக்கத்தின் உறுப்பினர்களாகவும் இவர்கள் இருந்துள்ளனர் என்றும் காவல்துறை தெரிவித்துள்ளது. இவர்கள் இருவரும் உ.பி. மாநிலம் அஜாம்காரைச் சேர்ந்தவர்கள்.

77 பேர் உயிரைக் குடித்த அகமதாபாத் தொடர் குண்டு வெடிப்பில் தொடர்புடைய அபு பாஷர், நேற்று டெல்லிக்கு கொண்டுவரப்பட்டான். டெல்லியில் ஊடுருவியிருந்தபோது ஜாமியா நகரில் இன்று தாக்குதல் நடத்தப்பட்ட அந்த வீட்டில் தான் இவன் தங்கியிருந்துள்ளான். ஜெய்பூர், அகமதாபாத், டெல்லி குண்டு வெடிப்புக்களை சதித் திட்டம் தீட்டி நிறைவேற்றியதாக கருதப்படும் மொஹம்மது உஸ்மான் குரேஷி என்கிற தாகீருடன் அபு பாஷர் தங்கியிருந்துள்ளான். இவனிடம் நடத்திய விசாரணையில்தான் அடிக்கின் பெயரை காவல் துறையினர் அறிந்தனர். இந்த விசாரணையை அடுத்தே தீவிரவாதிகளின் மறைவிடத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இத்தாக்குதலிற்கு இடையிலும் அங்கு தங்கியிருந்த 2 தீவிரவாதிகள் தப்பியிருக்கின்றனர் என்று காவல் ஆணையர் தெரிவித்துள்ளார். காவலர்களின் தாக்குதலில் காயமுற்றுப் பிடிபட்ட சைஃப் என்று தீவிரவாதியிடம் காவலர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தலைநகர் டெல்லியில் மேலும் சில தாக்குதல்களை அவர்கள் நடத்த திட்டமிட்டிருந்தது தெரியவந்துள்ளதாக காவல் துறை தெரிவித்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்