மின்சார தட்டுப்பாடு: மத்திய அரசு விளக்கம்!
வியாழன், 18 செப்டம்பர் 2008 (17:01 IST)
யுரேனியம் பற்றாக்குறை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் நமது நாடு முழுவதும் மின்சாரத் தட்டுப்பாடு நிலவுவதாக மத்திய வர்த்தகம், மின்சக்தித் துறை இணையமைச்சர் ஜெயராம் ரமேஷ் தெரிவித்தார்.
சென்னையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அவரிடம், தமிழ்நாட்டில் மின்சார பற்றாக்குறை ஏற்படக் காரணம் என்ன என்று கேட்டதற்கு, யுரேனியப் பற்றாக்குறையால் கல்பாக்கத்தில் உற்பத்தி திறனான 440 மெகாவாட்டைவிட குறைவாக, அதாவது 180 மெகாவாட் மட்டுமே உற்பத்தியாவதாகவும், கெய்டாவிலும் உற்பத்தித்திறனைவிட குறைவாக-300 மெகாவாட் மட்டுமே உற்பத்தியாவதாகவும் தெரிவித்தார்.
எரிவாயு திட்டங்களில் போதுமான உற்பத்தி இல்லாதது, நெய்வேலியில் கூடுதல் சுரங்கம் அமைக்கும் பணியால் தாமதம், பருவமழை பொய்த்தது போன்ற பல்வேறு காரணங்களால் தமிழகத்திலும், கேரளா, கர்நாடகா, ஆந்திரப் பிரதேசத்திலும் மின் தட்டுப்பாடு நிலவுவதாக அமைச்சர் குறிப்பிட்டார்.
கூடங்குளத்தில் அடுத்த ஆண்டு மார்ச் மாதத்தில் உற்பத்தி துவங்கும்போது 1000 மெகாவாட் மின்சாரம் கூடுதலாக கிடைக்கும் என்றார் அமைச்சர் ஜெயராம் ரமேஷ்.