பண்டிகை காலத்தை கருத்தில் கொண்டு தமிழகத்துக்கு 50 ஆயிரம் டன் கோதுமை ஒதுக்கீடு செய்ய மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
பண்டிகை காலத்தை கருத்தில் கொண்டு செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் மாநில, யூனியன் பிரதேசங்களுக்கு கோதுமை வழங்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. வீட்டு உபயோகத்துக்கான வெளிச்சந்தை விற்பனை திட்டத்தின் (ஒ.எம்.எஸ்.எஸ்.) கீழ் இது வழங்கப்படுகிறது.
இதில் தமிழகத்துக்கு 50 ஆயிரம் டன் கோதுமை ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கு குவிண்டாலுக்கு ரூ.1,154 என்றும் இந்திய உணவு கழகத்தின் உயர் நிலைக்குழு விலை நிர்ணயித்துள்ளது.
அந்தந்த மாநில, யூனியன் பிரதேச அரசுகள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட அளவு கோதுமையை இந்திய உணவு கழகத்தின் கிடங்குகளிலிருந்து பெற்று தங்களது பொது வினியோக கழகங்கள், கூட்டுறவு அங்காடிகள், அமைப்புகள், சுய உதவிக் குழுக்கள் உள்ளிட்டவற்றின் வாயிலாக பொது மக்களுக்கு வழங்க மத்திய உணவு, பொது வினியோக அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
பல்வேறு கல்வி நிறுவனங்கள், தாழ்த்தப்பட்டோர், பழங்குடியின பெண்கள் விடுதிகள் ஆகியவற்றுக்கும் இதை வழங்கலாம்.
இத்திட்டத்தின் கீழ் வழங்கப்படும் கோதுமையை மாவு மில்கள், பதப்படுத்தும் நிறுவனங்கள் ஆகியோருக்கு வழங்கக்கூடாது. அவர்களுக்கு கோதுமை வழங்குவது குறித்து பரிசீலித்து வருவதாகவும், இது பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.