அணு எரிபொருள்: ரஷ்யா, பிரான்ஸ் தடையின்றி வழங்கும் – விஞ்ஞானி சீனிவாசன்!

புதன், 17 செப்டம்பர் 2008 (14:17 IST)
நம்மோடு செய்துகொள்ளும் அணு சக்தி ஒத்துழைப்பை அமெரிக்கா முறித்துக்கொண்டாலும், மற்ற வல்லரசுகளான ரஷ்யாவும், பிரான்ஸூம் இந்தியாவிற்கு தொடர்ந்து - தடையின்றி அணு எரிபொருள் வழங்கும் என்று அணு விஞ்ஞானி எம்.ஆர். சீனிவாசன் கூறியுள்ளார்.

இந்தியா தனது பாதுகாப்புக் காரணங்களுக்காக அணு ஆயுத சோதனை நடத்தினால் அதனுடனான அணு சக்தி ஒத்துழைப்பை அமெரிக்க முறித்துக்கொள்ளும் என்றும், தொடர்ந்து எரிபொருள் வழங்குவதாக இந்தியாவிற்கு அளிக்கப்பட்டுள்ள உறுதிமொழி அரசியல் ரீதியானதுதான், அது சட்டபூர்வமானதல்ல என்றும் அதிபர் புஷ் அமெரிக்க நாடாளுமன்றத்திற்கு எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில், இதுகுறித்து நமது நாட்டின் மூத்த அணு விஞ்ஞானிகளில் ஒருவரும், இந்திய அணு சக்தி ஆணையத்தின் உறுப்பினர்களில் ஒருவருமான எம்.ஆர். சீனிவாசன், இந்தியா அணு ஆயுத சோதனை மேற்கொள்ளும் நிலையில் அமெரிக்க யுரேனியம் எரிபொருள் வழங்குவதை நிறுத்தினாலும், ரஷ்யா, பிரான்ஸ் ஆகிய இரண்டு நாடுகளும் நமது அணு சக்தி உலைகளுக்குத் தேவையான யுரேனியம் எரிபொருளை தடையின்றி தொடர்ந்து வழங்கும் என்று கூறியுள்ளார்.

பி.டி.ஐ. செய்தியாளரிடம் இவ்வாறு தெரிவித்துள்ள விஞ்ஞானி சீனிவாசன், “நாம் அணு ஆயுத சோதனை நடத்தும் பட்சத்தில் நமக்கு அளித்துவரும் எரிபொருளை நிறுத்துவது மட்டுமின்றி, நமக்கு விற்ற அணு சக்தி உபகரணங்களையும் அமெரிக்கா திரும்பப் பெற இந்த ஒப்பந்தம் வழிவகுக்கிறது. ஆனால், அணு சக்தி தொழில்நுட்ப வணிகக் குழுவில் (என்.எஸ்.ஜி.) உள்ள மற்ற நாடுகளை இந்த ஒத்துழைப்பு ஒப்பந்தம் எந்த வித்த்திலும் கட்டுப்படுத்தாது. இவ்வமைப்பில் உள்ள நாடுகளுக்கு இதுபோன்ற எந்தவிதமான பொது விதியும் கிடையாது. எனவே, இந்தியா அணு ஆயுத சோதனை நடத்தினாலும், நமது நாட்டின் அணு சக்தி உலைகளுக்குத் தேவையான எரிபொருளை ரஷ்யாவும், பிரான்ஸூம் தொடர்ந்து வழங்கும்” என்று கூறியுள்ளார்.

அமெரிக்க அணு சக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தத்தை நடைமுறைக்குக் கொண்டுவர வரையப்பட்டுள்ள 123 ஒப்பந்தத்தை அமெரிக்க நாடாளுமன்றம் விவாதித்து ஒப்புதல் வழங்கவுள்ள நிலையில், ரஷ்யா, பிரான்ஸ் நாடுகளுடன் தனித்த ஒப்பந்தங்களை உருவாக்கிக்கொள்ளுவது குறித்து இந்தியா பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்