இந்தியாவில் தென் கிழக்கு ஆசிய சுகாதார அமைச்சர்கள் மாநாடு!
திங்கள், 15 செப்டம்பர் 2008 (20:58 IST)
பதினோரு தென் கிழக்கு ஆசிய நாடுகளின் சுகாதார அமைச்சர்கள் கலந்து கொள்ளும் இரண்டு கூட்டங்களை இந்தியா நடத்துகிறது. இந்தக் கூட்டங்கள் இன்று முதல் இம்மாதம் 11-ம் தேதி வரை நடைபெறுகின்றன.
தென் கிழக்கு ஆசியாவிற்கான உலக சுகாதார நிறுவனத்தின் மண்டல கமிட்டி கூட்டத்தை அயலுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி இன்று புது டெல்லியில் துவக்கி வைத்தார். இந்தக் கூட்டத்தில் பல்வேறு நாடுகளின் சுகாதார அமைச்சர்கள் கலந்து கொண்டனர்.
தென் கிழக்கு ஆசிய மண்டலத்தில் சுகாதாரத் துறை எதிர்கொள்ளும் சவால்களையும், எதிர்காலத்திற்கான கொள்கை நெறியையும், இத்துறையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்களையும் அமைச்சர்கள் கலந்தாய்வு செய்யவிருக்கின்றனர்.
மனிதனின் உடல் நலத்தில் தட்பவெப்ப மாற்றம் ஏற்படுத்தும் தாக்கத்தையும், ஆரம்ப சுகாதாரத்திற்கு புத்துயிர் ஊட்டுவது குறித்தும் ஆராயவுள்ளனர்.
மத்திய சுகாதார அமைச்சர் அன்புமணி ராமதாஸ், உலக சுகாதார நிறுவனத்தின் தலைமை இயக்குனர் டாக்டர் மார்கரெட் சான், தென் கிழக்கு ஆசிய பிராந்திய இயக்குனர் டாக்டர் சாம்லி மற்றும் பிற வல்லுனர்கள் இந்த கூட்டங்களில் கலந்துகொள்கின்றனர்.