உள் நாட்டுப் பாதுகாப்பு: குடியரசுத் தலைவர் நாளை ஆலோசனை!
திங்கள், 15 செப்டம்பர் 2008 (17:31 IST)
நமது நாட்டின் உள் நாட்டுப் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு முக்கிய விடயங்கள் குறித்து விவாதிப்பதற்காக நாளை தலைநகர் டெல்லியில் குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீல் தலைமையில் ஆளுநர்கள் கூட்டம் துவங்குகிறது.
இரண்டு நாட்கள் நடக்கவுள்ள இந்தக் கூட்டம் குடியரசுத் தலைவர் மாளிகையில் நடக்கும் 42 ஆவது கூட்டமும், தற்போதைய குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் தலைமையில் நடக்கும் முதலாவது கூட்டமும் ஆகும்.
இந்தக் கூட்டத்தில் 28 மாநிலங்களின் ஆளுநர்களும், 3 யூனியன் பிரதேசங்களின் துணை ஆளுநர்களும் கலந்துகொள்கின்றனர்.
மேலும், துணைக் குடியரசுத் தலைவர்,பிரதமர் மற்றும் அயலுறவு, மனிதவள மேம்பாடு, வேளாண்மை மற்றும் நுகர்வோர் விவகாரம், உணவு மற்றும் பொது வினியோகம், பாதுகாப்பு, உள்துறை, நிதி, பழங்குடியினர் நலன், ஊரக மேம்பாடு, அறிவியல் தொழில்நுட்பம், பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாடு ஆகிய துறைகளின் அமைச்சர்கள் ஆகியோரும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்கின்றனர்.
நமது அண்டை நாடுகளுடன் பல்வேறு துறைகளில் நமக்குள்ள இருதரப்பு நல்லுறவுகள், நமது பன்னாட்டு எல்லைகள் மற்றும் அவற்றின் பாதுகாப்பு சார்ந்த பிரச்சனைகள், காவல்துறையை நவீனமாக்கும் திட்டம், இடதுசாரி பயங்கரவாதிகள் மற்றும் வன்முறையாளர்கள் ஆகியவற்றுடன் உள்நாட்டுப் பாதுகாப்பு விவகாரங்கள் பற்றியும் இந்தக் கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட உள்ளது.
மேலும், இந்தியாவின் வளர்ச்சிப்போக்கும் பருவநிலை மாற்றமும், இந்திய வேளாண்மையும் உணவுப் பாதுகாப்பும், தற்போதைய பொருளாதார நிலையும் விலைவாசியைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளும் ஆகிய விவாதங்களும் இந்தக் கூட்டத்தில் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வேலைவாய்ப்புசார்ந்த ஊரக மேம்பாட்டு விவகாரங்கள், குடிநீரும் சுகாதாரமும், பெண்களுக்கு அதிகாரமளிக்கும் திட்டங்களை நிறைவேற்றுதல், பாலினத் தர மேம்பாடு, பாலின அடிப்படையில் நிதி ஒதுக்கீடு, சமூக விரோதிகளிடம் இருந்து பெண்களுக்குப் பாதுகாப்பு, தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர் பகுதிகளின் மேம்பாட்டில் ஆளுநர்களின் பங்கு, துணை வேந்தர்கள் என்ற அடிப்படையில் உயர் கல்வி மேம்பாட்டில் ஆளுநர்களின் பங்கு ஆகிய விடயங்களும் இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்படுகின்றன.