ஜம்முவில் தீவிரவாதிகளுடன் மோதல்: பாதுகாப்புப் படையினர் 4 பேர் பலி!
திங்கள், 15 செப்டம்பர் 2008 (13:18 IST)
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் பூஞ்ச் மாவட்டத்தில் பதுங்கியிருந்த தீவிரவாதிகளுடன் நடந்த மோதலில் இந்திய இராணுவத்தினர் இருவரும், அம்மாநில காவல்துறையினர் இருவரும் கொல்லப்பட்டனர்.
பூஞ்ச் மாவட்டத்தில் சுரான்கோட் என்ற இடத்தில் தீவிரவாதிகள் பதுங்கியிருக்கும் தகவலறிந்த இராணுவத்தினரும், ஜம்மு-காஷ்மீர் காவல்துறையின் சிறப்புப் பிரிவு காவலர்களும், தீவிரவாதிகள் பதுங்கியிருந்து இடத்தை சுற்றிவளைத்தபோது, அவர்களை நோக்கி தீவிரவாதிகள் சரமாரியாக சுட்டதாகவும், இதில் இந்திய இராணுவ வீரர்கள் விஷ்ணு, ஜர்னைல் சிங், காவலர்கள் மக்பூல் ஷா, மெஹம்மது மரூஃப் ஆகிய நால்வர் உயிரிழந்ததாகவும், ஓம் பிரகாஷ் என்ற காவலர் காயமுற்றதாகவும் சுரான்கோட் வட்டார காவல் அதிகாரி பர்பீத் சிங் கூறியுள்ளார்.
தீவிரவாதிகளுடன் பாதுகாப்புப் படையினர் கடும் சண்டையில் ஈடுபட்டு வருவதாகவும் அவர் பி.டி.ஐ. செய்தி நிறுவன செய்தியாளரிடம் கூறியுள்ளார்.