ரிமோட் வெடிகுண்டு தடுப்புக் கருவிகள் கண்டுபிடிப்பு!
வெள்ளி, 12 செப்டம்பர் 2008 (14:22 IST)
பாதுகாப்புப் படையினரின் வாகனங்களின் மீது ரிமோட் உதவியுடன் நடத்தப்படும் ஐ.இ.டி. வெடிகுண்டுத் தாக்குதல்களைத் தடுக்கும் வகையில் புதிய கருவிகளை ராணுவத்தின் மின்சாரம், இயந்திரத்துறை கண்டுபிடித்துள்ளது.
வாகனங்கள் நகரும்போது மட்டும் அவற்றைப் பாதுகாக்கும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ள கருவிக்கு ஆஷி என்றும், வாகனங்களில் நிரந்தரமாகப் பொருத்தும் வகையிலான கருவிக்கு இந்தர் பிள்ளை என்றும் பெயரிடப்பட்டுள்ளது.
இந்தக் கருவிகளின் துவக்கச் சோதனைகளும், பயன்பாட்டுச் சோதனைகளும் வெற்றிபெற்றுள்ளன.
"ராணுவத்தினரின் அணி வகுப்பைக் குறிவைத்து தீவிரவாதிகள் நடத்தும் ரிமோட் ஐ.இ.டி. வெடிகுண்டுத் தாக்குதல்களை முறியடிக்கும் வகையில் இந்தக் கருவிகள் தயாரிக்கப்பட்டுள்ளன" என்று ராணுவத்தின் மின்சாரம், இயந்திரத்துறையின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இந்த இரண்டு கருவிகளையும் மொத்த அளவில் தயாரிக்கத் தேவையான சிப்புகள் உள்ளிட்ட உபகரணங்கள் தேவைக்கு உலகளவில் டெண்டர் விடப்பட்டுள்ளது.
ஜம்மு- காஷ்மீர் பகுதியில் தீவிரவாதிகளின் கண்ணிவெடி, ஐ.இ.டி. வெடிகுண்டுத் தாக்குதல் அபாயம் அதிகமுள்ள பகுதிகளில் பயணிக்கும் வாகனங்களுக்கு இந்தக் கருவிகள் வழங்கப்படும்.