சிமி மீதான தடை அக்டோபர் 2 ஆவது வாரம் வரை நீட்டிப்பு!
வியாழன், 11 செப்டம்பர் 2008 (14:25 IST)
இந்திய இஸ்லாமிய மாணவர் இயக்கம் (சிமி) மீதான தடையை அக்டோபர் 2 ஆவது வாரம் வரை நீட்டித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சிமி இயக்கத்தின் மீதான தடையை நீட்டிக்க அனுமதி கோரி மத்திய அரசு சார்பில் தொடரப்பட்டுள்ள மேல் முறையீட்டு வழக்கு இன்று உச்ச நீதிமன்றத்தில், தலைமை நீதிபதி கே.ஜி. பாலகிருஷ்ணன், நீதிபதி பி.சதாசிவம் தலைமையிலான முதன்மை அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தபோது ஆஜரான கூடுதல் அரசு வழக்கறிஞர் கோபால் சுப்பிரமணியன், இந்த வழக்கில் பதில் மனு தாக்கல் செய்வதற்குக் கூடுதல் அவகாசம் தேவைப்படுவதாக தெரிவித்ததை அடுத்த வழக்கு விசாரணை அக்டோபர் இரண்டாவது வாரத்திற்குத் தள்ளிவைக்கப்பட்டது.
அதுவரை சிமி இயக்கத்தின் மீதான தடை தொடரும் என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.
பயங்கரவாத, தேச விரோத நடவடிக்கைகளில் ஈடுபடும் காரணத்தால் சிமி இயக்கத்தின் மீது சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் விதிக்கப்பட்டுள்ள தடையை நீட்டிக்க வேண்டும் என்பதற்குப் போதுமான புதிய ஆதாரங்கள் இல்லை என்று கூறி, அந்த இயக்கத்தின் மீதான தடையை விலக்கி நீதிபதி கீதா மிட்டல் தலைமையிலான டெல்லி உயர் நீதிமன்ற சிறப்புத் தீர்ப்பாயம் ஆகஸ்ட் 5 ஆம் தேதி உத்தரவிட்டது.
இதை எதிர்த்து மத்திய அரசு தாக்கல் செய்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், சிறப்புத் தீர்ப்பாயத்தின் உத்தரவை ரத்து செய்தும், மறு உத்தரவு பிறப்பிக்கப்படும் வரை சிமி இயக்கத்தின் மீதான தடையை நீட்டித்தும் ஆகஸ்ட் 6ஆம் தேதி உத்தரவிட்டது.
இந்த வழக்கில் கடந்த மாதம் மத்திய அரசு தாக்கல் செய்த புதிய மனுவில், சுமார் 1,900க்கும் மேற்பட்ட சிமி இயக்கத்தினர் தற்போது சிறைகளில் இருப்பதாகவும் அவர்களின் மீது 89 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்திருந்தது.