சிங்கூர் விவகாரம்: டாடா அதிர்ச்சி!
திங்கள், 8 செப்டம்பர் 2008 (20:22 IST)
சிங்கூர் நில விவகாரத்தில் மேற்குவங்க அரசிற்கும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சித் தலைவர் மம்தா பானர்ஜிக்கும் இடையில் ஏற்பட்டுள்ள உடன்பாடு குறித்து டாடா நிறுவனம் அதிர்ச்சி தெரிவித்துள்ளது.
தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிலத்தின் அளவு குறைந்தால், நானோ காருக்குத் தேவையான உதிரிப்பாகங்களைத் தயாரிக்கும் தொழிற்சாலைகளை அமைப்பதில் சிக்கல் ஏற்படும் என்றும், அப்படி நேர்ந்தால், நானோ கார் உற்பத்தித் தொழிற்சாலையை வேறு இடத்திற்கு மாற்றியாக வேண்டிய கட்டாயம் உருவாகும் என்றும் டாடா நிறுவனம் கூறியுள்ளது.
பாதிக்கப்பட்டுள்ள விவாசாயிகளுக்கு டாடாவின் நானோ கார் தொழிற்சாலைக்குள் நிலம் வழங்கப்படும் என்று உடன்பாடு ஏற்பட்டதையடுத்துப் போராட்டத்தைக் கைவிட்டுள்ளதாக மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார்.
இந்த உடன்பாடு குறித்து அதிர்ச்சி தெரிவித்து டாடா நிறுவனம் விடுத்துள்ள அறிக்கையில், நானோ கார் உற்பத்தி தொழிற்சாலைக் கட்டுமானப் பணிகளைத் தொடர்ந்து நிறுத்தி வைக்கப்போவதாக அறிவித்துள்ளது.
"நானோ கார் உற்பத்தித் தொழிற்சாலை, காருக்குத் தேவையான உதிரிப்பாக உற்பத்தித் தொழிற்சாலைகள் ஆகியவை இயங்கத் தேவையான நில வசதி வேண்டும். எதிர்காலத் தேவைகளைக் கருத்தில் கொண்டு திட்டமிட்டுள்ள எங்களின் பங்குதாரர்களுக்கு நாங்கள் உரிய வசதிகளைச் செய்துதர வேண்டும்.
நானோ கார் உற்பத்தியில் உதிரிப்பாகத் தொழிற்சாலைகளுக்கு முக்கியப் பங்கு இருப்பதால், அவற்றை நாங்கள் அலட்சியம் செய்துவிட முடியாது. திட்டங்களை மாற்றியமைக்கும்படி உற்பத்தியாளர்களை நாங்கள் நிர்ப்பந்திக்க முடியாது.
மேற்குவங்க அரசிற்கும் சிங்கூர் போராட்டக்காரர்களுக்கும் இடையில் ஏற்பட்டுள்ள உடன்பாடு டாடா மோட்டார்ஸ் நிறுவனத்திற்கு அதிர்ச்சியளிக்கிறது.
நெருக்கடி தொடர்ந்தால் சிங்கூரில் நானோ கார் உற்பத்தித் தொழிற்சாலை அமைக்கும் பணிகளைக் கைவிட நேரிடும்." என்று டாடா நிறுவனம் கூறியுள்ளது.
இதற்கிடையில், நானோ கார் உற்பத்தித் தொழிற்சாலைக்காக வழங்கப்பட்ட 997 ஏக்கர் நிலத்தில் 40 ஏக்கர் நிலத்தை ஏற்கெனவே டாடா நிறுவனம் திருப்பி அளித்து விட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
இதற்குமேல் நிலத்தை திருப்பியளிக்கும்படி நெருக்கடி தரப்பட்டால், சிங்கூரில் நானோ கார் உற்பத்தித் தொழிற்சாலை அமைக்கும் பணிகளை முழுவதுமாக நிறுத்தும் சூழல் ஏற்படும் என்று டாடா நிறுவனம் கூறிவிட்டதாகவும் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.