6-வது ஊதியக்குழு பரிந்துரை: மத்திய அரசு ஊழியர் குழந்தைகளின் கல்வி கட்டணப்படி அதிகரிப்பு!
மத்திய அரசு ஊழியர்களின் குழந்தைகளுக்கு வழங்கப்பட்டு வரும் கல்வி கட்டணப்படி, 6-வது ஊதியக்குழு பரிந்துரையின்படி ரூ.40லிருந்து ரூ.1.000 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த திருத்தப்பட்ட கல்வி கட்டனப்படி விகிதங்கள் செப்டம்பர் 1ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. இது தொடர்பாக மத்திய நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "மத்திய அரசு ஊழியர்களின் குழுந்தைகளுக்கு கல்வி பயில 2 குழந்தைகள் வரை அரசு ஊழியர்களுக்கு கட்டணப்படி அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது பல்கலைக்கழகங்கள் அங்கீகரிக்கப்பட்ட பள்ளிகளில் பயிலும் சிறுவர் கல்வியிலிருந்து, 12ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு கட்டணப்படி வழங்கப்படும். இந்த உதவித்தொகை முன்பு 1ஆம் வகுப்பு முதல் 10ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வந்தது. 6-வது ஊதியக்குழு பரிந்துரையின் அடிப்படையில் இந்த கட்டணப்படி அதிகரிக்கப்படுகிறது. இதுவரை இந்த கல்வி கட்டணப்படி தனியாகவே வழங்கப்பட்டு வந்தது. இப்போது குழந்தைகள் கல்விக்கட்டண திட்டத்துடன் சேர்த்து வழங்கப்படும். அரசு ஊழியர் ஒவ்வொருவரும் 2 குழந்தைகள் வரை இந்த கல்விக்கான அரசு கட்டணப்படியைப் பெற முடியும். அரசு ஊழியரின் கல்வி பயிலும் குழந்தைகள் தேர்வில் வெற்றி பெறாவிட்டாலும் தொடர்ந்து இந்த கல்வி கட்டணப்படி வழங்கப்படும் என்று 6-வது ஊதியக்குழு பரிந்துரை செய்துள்ளது. கல்வி கட்டணம், நுழைவு கட்டணம், ஆய்வகக் கட்டணம், சிறப்புக் கட்டணம், நூலக கட்டணம், விளையாட்டு கட்டணம், கல்வி சார்ந்த பிற செயல்களுக்கான கட்டணங்கள், பாடப்புத்தகங்கள், நோட்புக், 2 செட் சீருடைகள், ஒரு செட் ஷூ ஆகியவற்றுக்கு இந்த கட்டணப்படி ஓராண்டுக்கு வழங்கப்படும். குழுந்தைகளுக்கான கல்வி கட்டணப்படி பெறுவதற்கு அதிகப்பட்ச உச்சவரம்பு ஆண்டுக்கு ரூ.12,000 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன்படி ஒவ்வொறு 3 மாதத்திற்கும் ரூ.3,000 வரை ஊழியர்கள் கல்வி கட்டணப்படியாகப் பெறலாம். கணவன், மனைவி இருவருமே அரசு ஊழியர்களாக இருந்தால், ஒருவர் மட்டுமே இந்த கல்வி கட்டணப்படியை பெற முடியும். மேலும், விடுதிக் கட்டண மானியமாக ஒரு குழுந்தைக்கு ஒரு மாதத்திற்கு அதிகபட்சமாக ரூ.3,000 வரை இந்தத் திட்டத்தில் பெறமுடியும். ஆனால் கல்வி கட்டணப்படியையும், விடுதி கட்டண மானியத்தையும் ஒரே நேரத்தில் பெறமுடியாது. அகவிலைப்படி 50 விழுக்காட்டிற்கு கூடுதலாகும் போது, அதிகப்படியாக இந்த திட்டத்தின் கல்வி கட்டணப்படி மேலும் 25 விழுக்காடு அதிகரிக்கும். இந்த கல்வி கட்டணப்படியை பெறுவதற்கான விதிமுறைகள் சுலபமாக்கப்பட்டுள்ளன" என்று கூறப்பட்டுள்ளது.
செயலியில் பார்க்க x