நாடாளுமன்றத்தில் அளிக்கப்பட்ட உறுதிமொழிகளை இந்தியா தாண்டாது - பிரணாப்!
வியாழன், 4 செப்டம்பர் 2008 (20:29 IST)
புது டெல்லி: அணு சக்தி தொழில்நுட்ப நாடுகள் குழுவுடன் வணிகம் மேற்கொள்ள விலக்குடன் கூடிய அனுமதி கோரி அணு சக்தி தொழில்நுட்ப வணிக நாடுகள் குழுவிடம் (என்.எஸ்.ஜி.)இந்தியா சார்பாக சமர்ப்பிக்கப்பட்டுள்ள தீர்மான வரைவில், நாடாளுமன்றத்தில் பிரதமர் மன்மோகன் சிங்கும், தானும் அளித்துள்ள உறுதிமொழிகளைத் தாண்டி வேறு எந்த நிபந்தனைகளையும் சேர்ப்பதற்கு ஒப்புக்கொள்ள மாட்டோம் என்று மத்திய அயலுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி கூறியுள்ளார்.
அணு சக்தி தொழில்நுட்ப வணிகம் மேற்கொள்ள விலக்குடன் (Waiver) கூடிய அனுமதி கோரி இந்தியா சார்பில் அமெரிக்கா சமர்ப்பித்துள்ள தீர்மான வரைவில், தங்களது வலியுறுத்தலின்பேரில் சில திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்ட பிறகு, அதன் மீது இறுதி முடிவை எடுப்பதற்காக என்.எஸ்.ஜி. (Nuclear Suppliers Group _ NSG) இன்று கூடவுள்ள நிலையில், 'இந்தியா அணு ஆயுத சோதனை மேற்கொண்டால் அந்நாட்டிற்கு அமெரிக்காவிலிருந்து வழங்கப்படும் எரிபொருள் நிறுத்தப்படும்' என்று உறுதிகூறி அமெரிக்க நிர்வாகம், அந்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ள தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்துத் தலைநகர் டெல்லியில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த மத்திய அயலுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜியிடம் கேட்டதற்கு, "நாங்கள் ஏற்கெனவே எங்கள் நிலைப்பாட்டை உறுதிபடக் கூறியுள்ளோம். நாடாளுமன்றத்தில் பிரதமர் மன்மோகன் சிங்கும், நானும் அளித்துள்ள உறுதிமொழிகளைத் தாண்டி, தீர்மான வரைவில் புதிதாக எந்த நிபந்தனைகளும் சேர்க்கப்படுவதை நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம். நாங்கள் அளித்துள்ள உறுதிமொழிகளைக் காப்பாற்றுவோம்" என்றார்.
இன்று என்.எஸ்.ஜி. கூட்டத்தில் நடந்துள்ள விவாதங்களின்படி இந்தியாவிற்கு விலக்குடன் கூடிய அனுமதி கிடைப்பதில் சிக்கல் உள்ளது பற்றிக் கேட்டதற்கு, விரிவாக பதிலளிக்க மறுத்த பிரணாப் முகர்ஜி, "சமூக ரீதியிலான அணு சக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்தத் தேவையான ஆவணங்கள் தொடர்பாக பிரதமரும் நானும் தந்துள்ள உறுதிமொழிகளை அடைய முயற்சிப்போம்" என்று மட்டும் கூறினார்.