ஜம்முவில் தீவிரத் தேடுதல் வேட்டை: காஷ்மீரில் பதற்றம்!
வியாழன், 28 ஆகஸ்ட் 2008 (16:34 IST)
பாகிஸ்தானில் இருந்து ஊடுருவியுள்ள தீவிரவாதிகள் சிலர் ஜம்முவிற்குள் நுழைந்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில், பாதுகாப்புப் படையினர் தீவிரத் தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.
காஷ்மீரில் இன்று தொடர்ந்து ஏழாவது நாளாக இயல்பு நிலை திரும்பவில்லை என்பதால் பதற்றம் நீடிக்கிறது.
ஜம்முவில் அப்பாவிகளைப் பிணையக் கைதிகளாகப் பிடித்து வைத்திருந்த 3 லஷ்கர்- இ தாயிபா இயக்கத் தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ள நிலையில், இன்னும் சில தீவிரவாதிகள் நகருக்குள் நுழைந்திருக்கலாம் என்று சந்தேகம் எழுந்துள்ளது.
இதனால், பன்னாட்டு எல்லை, எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு சார்ந்த பகுதிகளில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. ஜம்மு மாவட்ட எல்லைகள் சீலிடப்பட்டு, வாகனங்கள் அனைத்தும் பலத்த சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றன.
முத்தி, கஜான்சூ, மார்ஹ், அக்னூர், கரோட்டா, ஹிராநகர் உள்ளிட்ட காவல்நிலையங்களின் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் தேடுதல் மற்றும் கண்காணிப்புப் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன என்று ஜம்மு- காஷ்மீர் டி.ஜி.பி. குல்தீப் கோடா தெரிவித்தார்.
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்குச் செல்லும் வழிகளில் ராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
இதற்கிடையில், ஸ்ரீ அமர்நாத் சங்கார்ஷ் சமிதி நடத்தி வரும் முழு அடைப்புப் போராட்டத்தால் பூஞ்ச் உள்ளிட்ட பகுதிகளில் பதற்றம் நிலவுகிறது. பூஞ்ச், சம்பா உள்ளிட்ட பகுதிகளில் ஊரடங்கு நீடிக்கிறது.
காஷ்மீரில் தொடர்ந்து பதற்றம்!
காஷ்மீர் பள்ளத்தாக்கில் தொடர்ந்து ஏழாவது நாளாகக் காலவரையற்ற ஊரடங்கு உத்தரவு நீடிப்பதாலும், அதை மீறி பிரிவினைவாதக் கட்சிகளின் ஒருங்கிணைப்புக் குழு அறிவித்துள்ள போராட்டங்களினாலும் பதற்றம் நீடிக்கிறது.
அவ்வப்போது தேர்ந்தெடுக்கப்படும் பகுதிகளில் ஊரடங்கு சிறிது நேரம் தளர்த்தப்படுகிறது. அப்போது பொது மக்கள் தங்கள் வீடுகளில் இருந்து அவசர அவசரமாக வெளியேறி சந்தையில் கிடைக்கும் பொருட்களை வாங்கிச் செல்வதைப் பரவலாகப் பார்க்க முடிகிறது.
அத்தியாவசியப் பொருட்கள் தட்டுப்பாடு, மருத்துவமனைகளில் மருத்துவர், செவிலியர் பற்றாக்குறை ஆகியவை நீடிக்கின்றன. பள்ளிகள், கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்களும், வங்கிகள், அரசு அலுவலகங்கள் ஆகியவையும் தொடர்ந்து மூடப்பட்டுள்ளன.